உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை வெளியீடு

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் புதன்கிழமை வெளியிட்டார்.
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் புதன்கிழமை வெளியிட்டார்.
சேலம் மாவட்டத்துக்குள்பட்ட நகர்ப்புற,  ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் ஒரு மாநகராட்சி,  4 நகராட்சிகள்,  33 பேரூராட்சி வார்டுகள்,  20 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளின் கிராம ஊராட்சி மன்ற வார்டுகள்,  ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எல்லைகளை தமிழ்நாடு சட்டம்  23/2017 மற்றும் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின்படி 2011-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.
வார்டுகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டு சேலம் மாநகராட்சி கோட்டங்கள் 60 வார்டுகள்,   ஆத்தூர்,  நரசிங்கபுரம்,  எடப்பாடி, மேட்டூர் ஆகிய நகராட்சிகளின் 111 வார்டுகள்,  33 பேரூராட்சிகளில் 510 வார்டுகள்,  மாவட்ட ஊராட்சிகளில் 29 வார்டுகள், ஊராட்சி ஒன்றியங்களில் 288 வார்டுகள், கிராம ஊராட்சிகளில் 3,597 வார்டுகளும் உள்ளன. 
மேலும் வெளியிடப்பட்டுள்ள வரைவு வார்டுகளின் முன்மொழிவுகளை பொதுமக்கள் பார்வையிட்டு ஜனவரி 2 ஆம் தேதிக்குள் தங்களது கருத்துகள்,  ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளையும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊராட்சி செயலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ ஜனவரி 2 ஆம் தேதி மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அருள்ஜோதிஅரசன்,  உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கோபிநாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குழந்தைதெரசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com