சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரை தேர்த் திருவிழாவையொட்டி தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
சங்ககிரி மலையில் உள்ள சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து சுவாமிக்கு தினசரி தங்கும் மண்டபத்தில் நண்பகல் 12 மணி, இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து 8 நாள்களும் சுவாமி அன்னபட்சி, சிங்கம், கருடன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி நகரில் வீதி உலா வந்தார். 9-ஆவது நாள் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னகேசவப் பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் சுவாமிகள் திருத்தேர்களில் எழுந்தருளினர். சுவாமிகளை பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனர். மாலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் எழுந்தருளிய சிறிய தேரை முதலாவதாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து சென்னகேசவப் பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் எழுந்தருளிய பெரிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர்களில் கட்டுவதற்கு சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூர், ராயலூர் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வழக்கம் போல வாழை மரம், இளநீர், பனை நுங்கு, பூக்களை மேளதாளங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். தேரோட்ட விழாவில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு வழிபட்டனர். பெரிய தேரை சங்ககிரி எம்.எல்.ஏ. எஸ்.ராஜா வடம் பிடித்து இழுத்துத் தொடக்கி வைத்தார். சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரை முருகன், செயல் அலுவலர் எஸ்.விஸ்வநாதன், பட்டக்காரர் எஸ்.ஏ.ராஜவேல், ஊர்க்கவுண்டர் எஸ்.டி.சுந்தரேசன், திருவிழா ஆலோசனைக்குழுத் தலைவர் என்.எம்.எஸ்.மணி, உறுப்பினர்கள் ஆர்.செல்லப்பன், என்.சி.ஆர்.ரத்தினம், செல்வம், சின்னமுத்து, மங்கையர்க்கரசி, சி.கரும்பாயிரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சங்ககிரி நகர கார் மற்றும் சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது. சங்ககிரி நண்பர்கள் குழுவின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு கட்டளைகளுக்கு பிறகு மே 8-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதனையடுத்து 19-ஆம் நாள் மே 9-ஆம் தேதி காலை சுவாமி மலைக்கு எழுந்தருளுகிறார். அன்றைய தினம் மலையில் வன்னிய குல சத்திரியர்கள் அமைப்பின் சார்பில் குறிச்சி அலங்காரம் பலவேறு வாணவேடிக்கையுடன் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.