நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நீர்வழிப்பாதை, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்கு முன்னுரிமை: ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்

நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அளித்து

Updated On :8 அக்டோபர் 2018, 9:14 am IST

நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருகிறது என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது:
வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதை முன்னிட்டு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுகிறது. 
இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் குறித்து நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படி உரிய விதிமுறைகளைப் பின்பற்றி  ஏரி, குளங்கள்,  குட்டைகளுக்குச் செல்லும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். எனவே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை கொடுத்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் அரசு அலுவலர்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். 
மக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுத்தினாலோ அல்லது ஆக்கிரமிப்புகள் அகற்றுவதைத் தடை செய்யும் நோக்கில் செயல்பட்டாலோ அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில் 185.85 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 2,382 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. 
மேலும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
மேலும், நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வீடுகள் பாதிக்கப்படும் நபர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்று இடம் தேர்வு செய்து உடனடியாக இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. 
சேலம் மாவட்டத்தில் நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வீடுகள் பாதிக்கப்படும் நபர்களுக்கு இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு  இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு தேவையான  உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் இரா.சுகுமார்,   மாநகராட்சி, வருவாய்த்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

குப்பைகளை அகற்ற 1 வாரம் கெடு
அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 5-இல் உள்ள பாத்திமா நகரில் தீவிர தொற்று நோய் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
தினந்தோறும் களப்பணியாளர்கள் மூலம் அனைத்து வீடுகளிலும் , தீவிர தொற்று நோய் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழுக்கள் உருவாகாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  
ஆனால், சில வீடுகள் பயன்படுத்தப்படாமல் தொடர்ந்து பூட்டியே இருப்பதால் வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட காலிமனை மற்றும் பயன்படாத நிலையில் உள்ள வீடுகளின் உரிமையாளர்கள் 1 வார காலத்துக்குள் அகற்றிட வேண்டும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
பின்னர் அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 4-இல் நியூ போர்லண்ட்ஸ் குடியிருப்புப் பகுதி மற்றும் சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 3-இல் திருமால் நகர் பகுதியிலும் ஆய்வு செய்த ஆட்சியர் கீழ் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், பூந்தொட்டிகள்  முறையாகப் பாரமரிக்கப்பட்டு வருகிறதா என்பதையும் பார்வையிட்டார்.
ஆய்வின் போது மாநகர்நல அலுவலர் மருத்துவர் கே.பார்த்திபன், உதவி ஆணையாளர் பி.கே.கோவிந்தன், உதவி செயற்பொறியாளர் எம்.செல்வராஜ், சுகாதார அலுவலர் ஆர்.ரவிச்சந்தர், சுகாதார ஆய்வாளர் ஆர்.சங்கர், வீ.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.