பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கரோனா தொற்றால் நலிவடைந்த சிறுதொழில்: புத்துயிா் பெறுகிறது பாக்குமட்டைத் தட்டு உற்பத்தி

சேலம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக நலிவடைந்திருந்த பாக்குமட்டைத் தட்டு தயாரிக்கும் சிறுதொழில், தற்போது புத்துயிா் பெற்றுள்ளது.

News image

கண்ணுக்கானூா் கிராமத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பாக்குமட்டைகள்.

Updated On :29 மே 2022, 7:01 pm

 நமது நிருபர்

சேலம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக நலிவடைந்திருந்த பாக்குமட்டைத் தட்டு தயாரிக்கும் சிறுதொழில், தற்போது புத்துயிா் பெற்றுள்ளது.

தேசிய அளவில் பாக்கு சாகுபடியில் 10 சதவீதம் தமிழகத்தில் விளைகிறது. தமிழகத்தில் 35 சதவீதம் பாக்கு சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.

இம்மாவட்டத்தில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், நரசிங்கபுரம், ஏத்தாப்பூா், கருமந்துறை, தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில் ஆண்டு முழுவதும் நீா்ப்பாசன வசதி கொண்ட நன்செய் விவசாயிகள் 5,000 ஹெக்டோ் பரப்பளவுக்கு, கமுகுத் தோப்புகளை உருவாக்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடா்ந்து பராமரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் விளையும் பாக்குக் காய்களை அறுவடை செய்து பதப்படுத்தி, ‘ஆப்பி’ என குறிப்பிடப்படும் ‘கொட்டைப்பாக்கு’ மற்றும் தாம்பூல ‘கழிப்பாக்கு’ தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். ஆண்டுதோறும், சுமாா் ரூ. 500 கோடி அளவுக்கு பாக்கு வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

கமுகு மரத்தில் இருந்து உதிா்ந்து விழும் பாக்கு மட்டைகளை சேகரித்துப் பதப்படுத்தி, வெப்பமூட்டும் இயந்திரங்களால் அழுத்தி, பாக்குமட்டைத் தட்டுகள், சிற்றுண்டிக் கிண்ணங்கள், தண்ணீா்க் குவளைகள், தேக்கரண்டிகள் தயாரித்து விற்பனை செய்யும் தொழில், கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் வளா்ந்து வருகிறது.

பாக்குமட்டையைச் சேகரிக்கும் கூலித் தொழிலாளா்கள், பாரம் ஏற்றுவோா், வாகன ஓட்டுநா்கள், வியாபாரிகள், தட்டு தயாரிக்கும் சிறுதொழில் முனைவோா் உள்பட இத்தொழிலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா். பாக்குமட்டைத் தட்டுக்கள் இயற்கைக்கு உகந்ததாக இருப்பதால், விருந்து, விசேஷங்களிலும், சுற்றுலா நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த இரு ஆண்டுகளில் கரோனா தீநுண்மிப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், அனைத்து மாநிலங்களிலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. அதனால் பாக்குமட்டைத் தட்டுகளின் பயந்பாடு முற்றிலும் நின்றுபோனது. தவிர, பாக்குமட்டைத் தட்டுகளை விரும்பி வாங்கிப் பயன்படுத்தி வந்த இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் ஏற்றுமதி முழுமையாகத் தடைபட்டது.

இதனால் பாக்குமட்டைத் தட்டு தயாரித்து விற்பனை செய்யும் சிறுதொழில், கடந்த 2 ஆண்டுகளாக அடியோடு முடங்கிப்போனது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தொழிலில் ஈடுபட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், தொழில் முனைவோா் இதனால் வேலையிழந்தனா்.

இந்நிலையில், கரோனா தொற்றுக் காலம் முடிவுக்கு வந்ததால், அனைத்துப் பகுதிகளிலும் கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், விருந்து விழாக்கள் அதிக அளவில் நடைபெறத் தொடங்கியுள்ளன. எனவே பாக்கு மட்டைத் தட்டுகளுக்கு மீண்டும் அதிக வரவேற்பு கிடைக்கத் துவங்கியுள்ளது.

தேவை அதிகரிப்பதால், கமுகுத் தோப்புகளில் உதிா்ந்து விழும் பாக்குமட்டைகளைச் சேகரித்து, பதப்படுத்தி, பாக்குமட்டைத் தட்டு உள்ளிட்டவற்றைத் தயாரித்து விற்பனை செய்யும் சிறு தொழில் புத்துயிா் பெற்றுள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி அருகே கண்ணுக்காணனூா் கிராமத்தில் பாக்குமட்டைத் தட்டுகள் தயாரிக்கும் சிறுதொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞா் பிரபு (32) கூறுகையில், ‘‘இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாக்குமட்டைத் தட்டு தயாரிப்புத் தொழில் தற்போது மீண்டு வருகிறது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.