மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வாழப்பாடி அருகே 16 ஆண்டுக்குப் பின் அம்மன் கோயில் திருவிழா

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் பிரசித்தி பெற்ற அத்தனூரம்மன் மற்றும் மாரியம்மன் தேர்த்திருவிழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.

News image
பாரம்பரிய முறைப்படி தீபந்தங்கள் ஏந்தியபடி 2,000 ஆண்கள் ஊர்வலமாக சென்றனர்.
Updated On :7 செப்டம்பர் 2022, 4:19 am

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் பிரசித்தி பெற்ற அத்தனூரம்மன் மற்றும் மாரியம்மன் தேர்த்திருவிழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.

இவ்விழாவையொட்டி அம்மனுக்கு பாரம்பரிய முறைப்படி சக்தி அழைக்க, நள்ளிரவில்  கைகளில் தீபந்தங்கள் ஏந்தியபடி 2,000  ஆண்கள் ஊர்வலமாக சென்றது பக்தர்கள், பொதுமக்களை பரவசப்படுத்தி மிரள வைத்தது.

Story image

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அத்தனூரம்மன் மற்றும் ஆணைப்பிள்ளையார் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெகு விமரிசையாக தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவின் போது தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், நள்ளிரவில்  மின் விளக்குகளை பயன்படுத்தாமல், பாரம்பரிய முறைப்படி தீப்பந்தங்களை கையில் ஏந்தி இரண்டு கி.மீ. தூரத்திற்கு ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சக்தி அழைத்து வரும் வழிபாட்டு முறை இன்றளவும் மரபு மாறாமல் தொடர்ந்து வருகிறது.

சிங்கிபுரத்தில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 50 லட்சத்திற்கு மேல் செலவு செய்து சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய பிரம்மாண்டமான இரு மரத்தேர்கள் வடிவமைக்கப்பட்டு, தேர்த்திருவிழா ஒரு வாரத்திற்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

திருவிழாவையொட்டி சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் அத்தனூரம்மனுக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சக்தி அழைக்கும் விழா நடைபெற்றது. சிங்கிபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் முதல் இளைஞர்கள், முதியவர்கள் வரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் திரண்டு வந்து, மாரியம்மன் சன்னதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த விளக்கெண்ணெய் தோய்க்கப்பட்ட தீப்பந்தங்களை கையில் ஏந்திபடி, அம்மனை சக்தி அழைத்து வர மிகுந்த ஆரவாரத்தோடு ஊர்வலமாகச் சென்றனர். இந்தக் காட்சி, பக்தி பரவசத்தை ஏற்படுத்தியதோடு, இவ்விழாவை காண குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களையும் பொதுமக்களையும் மிரள வைத்தது.

Story image

இந்த நிகழ்வில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு வாழப்பாடி தீயணைப்பு துறை வீரர்கள், தீயணைப்பு வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி ஸ்வேதா, காவல் ஆய்வாளர் உமாசங்கர் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விதவிதமான மின் விளக்குகள் பயன்படுத்தப்படும் இக்கால கட்டத்திலும், பாரம்பரிய முறைப்படி,  மரபு மாறாமல் நள்ளிரவு நேரத்தில் மின்விளக்குகளை பயன்படுத்தாமல், தீப்பந்தங்களை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்ற ஆண்கள், அம்மனை சக்தி அழைத்து வந்த, பிரமிக்க வைக்கும் இந்த வினோத வழிபாட்டு ஊர்வலம் குறித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இன்று அத்தனூரம்மன் தேரோட்டமும், நாளை மாரியம்மன் தேரோட்டமும், அடுத்தடுத்து 2 தினங்களுக்கு சத்தாபரணம், வான வேடிக்கை, கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.