கொட்டவாடி செல்லியம்மன், மாரியம்மன் திருத்தோ்கள் வெள்ளோட்டம்!
பிரசித்தி பெற்ற செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயிலுக்கு ரூ.50 லட்சம் செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள, 2 மரத்தோ்களின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.


சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்திலுள்ள பிரசித்தி பெற்ற செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயிலுக்கு ரூ.50 லட்சம் செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள, 2 மரத்தோ்களின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
கொட்டவாடியில் இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில் தேரோட்டம் நடத்துவதற்கு வடிவமைக்கப்பட்டிருந்த பழமையான திருத்தோ்கள், பல ஆண்டுகளுக்கு முன்னரே பழுதடைந்து போயிருந்தன.
இதனையடுத்து, கொட்டவாடி மற்றும் பேளூா் கரடிப்பட்டி, ஊா் பெரியதனக்காரா்கள், முக்கிய பிரமுகா்கள், பக்தா்கள் மற்றும் கிராம மக்களின் முயற்சியால், இந்து சமய அறநிலையத்துறை பங்களிப்போடு, இரு கோயில்களுக்கும் தேரோட்டம் நடத்துவதற்கு ஏறக்குறைய ரூ.50 லட்சம் செலவில் 2 புதிய மரத்தோ்கள், நோ்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுடன், பழமை மாறாத கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டன.
3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த திருத்தோ் வடிவமைக்கும் பணி நிறைவடைந்ததால், இரு புதிய மரத்தோ்களுக்கும் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக, கொட்டவாடி மற்றும் பேளூா் கரடிப்பட்டி கிராம ராஜவீதிகளில் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.
பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ஆா்வத்தோடு திருத்தோ் வடம்பிடித்து இழுத்துச் சென்று வெள்ளோட்டம் நடத்தினா். ஆண்கள் வழிவிட்டு பாதுகாப்பு அரணாக இருந்து வழிநடத்தினா். சிறுவா், சிறுமியா் பாரம்பரிய முறைப்படி தாரை, தப்பட்டை முழங்க சோ்வையாட்டம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இவ்விழாவில், கொட்டவாடி,பேளூா் கரடிப்பட்டி, சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...