/

சேலத்தில் மாணவனின் பிறந்த நாளே, இறந்த நாளாக மாறிய சோகம்

சேலத்தில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய மாணவன் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:42 am

DIN

சேலத்தில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய மாணவன் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரஞ்சித்குமார் என்பவர் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று ரஞ்சித்குமாரின் பிறந்தநாள் என்பதால் நண்பருடன் கொண்டாடியுள்ளார். அப்போது ரஞ்சித் வீட்டின் அருகே உள்ள நண்பர்களான சுந்தர், கௌதம் ஆகியோர் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வைத்து விட்டு இன்ப அதிர்ச்சியாக அழைத்து வர கல்லூரிக்கு சென்றுள்ளனர். 

பின்னர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரஞ்சித்குமார் மற்றும் அவரது நண்பர்களான கௌதம் சுந்தர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் மற்றும் கௌதம் ஆகிய இருவரும் பலியாகினர். இருசக்கர வாகனத்தில் உடன் சென்ற மற்றொரு மாணவர் சுந்தர் தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

பின்னர் உடற்கூராய்வுக்காக இரண்டு மாணவர்களின் உடல்களும் சேலம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. மேலும் ரஞ்சித் மற்றும் கௌதம் உடன் பயின்ற மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை குவிந்தனர். மாணவன், பிறந்தநாள் கொண்டாடத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் நிலையில் விபத்து ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.