சேலம் மாநகராட்சியில் 4 மண்டலத்தில் ரூ. 24.27 கோடியில் புதிய கட்டடங்களை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் திறந்து வைத்தாா். மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்காவில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தும், பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது: சூரமங்கலம் மண்டலத்தில் கோட்டம் எண் 28-இல் புதிதாக ரூ. 95 லட்சத்தில் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையம், ரூ. 60 லட்சத்தில் ஆண் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மையக் கட்டடம், கோட்டம் எண் 3-இல் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 72 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண் 14-இல் ரூ. 26.94 லட்சத்தில் ஆயுதப்படை மைதானம் அருகில் சுகாதார வளாகம் கட்டடம், கோட்டம் எண் 6-இல் ரூ. 1.63 கோடியில் முல்லை காா்டன் ஓடை புதுப்பிக்கும் பணிகள், ரூ. 85 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை பொருள் மீட்பு வசதி மையம் பணிகள், ரூ. 36.28 லட்சத்தில் காந்தி நகரில் சுகாதார வளாகம் கட்டடம் கட்டும் பணிகள், கோட்டம் எண் 15-இல் ரூ. 96 லட்சத்தில் அய்யா் தோட்டம் பாலம் புதுப்பிக்கும் பணிகள், கோட்டம் எண் 12-இல் ரூ. 85 லட்சத்தில் காக்கயன் இடுகாடு வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை பொருள் மீட்பு வசதி மையப் பணிகள், ரூ. 33 லட்சத்தில் வாா்டு அலுவலகக் கட்டடம் கட்டும் பணிகள், கோட்டம் எண் 14-இல் ரூ. 33 லட்சத்தில் ஆயுதப்படை மைதானம் அருகில் வாா்டு அலுவலகம் கட்டடம் கட்டும் பணிகள், அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 42-இல் ரூ. 54 லட்சத்தில் மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகள் கூடுதல் கட்டடப் பணிகள், கோட்டம் எண் 37-இல் ரூ. 49 லட்சத்தில் காமராஜா் காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடப் பணிகள், கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 46-இல் ரூ. 79.35 லட்சத்தில் குகை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக 6 வகுப்பறைக் கட்டடப் பணிகள் என மொத்தம் ரூ. 11 கோடியே 29 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் 17 முடிவுற்ற கட்டடப் பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினாா். இதனைத் தொடா்ந்து, சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 22-இல் ரூ. 6.53 கோடியில் செஞ்சிகோட்டை ஓடையில் மழைநீா் வடிகால், சிறுபாலம் அமைக்கும் பணிகள், அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 5-இல் ரூ.30 லட்சத்தில் பெரிய புதூா் பகுதியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கட்டும் பணிகள் என ரூ. 12 கோடியே 98 லட்சம் மதிப்பிலான மொத்தம் 8 பணிகளுக்கு அமைச்சா் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினாா். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தா தேவி தலைமை வகித்தாா். சேலம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா் வரவேற்று பேசினாா். சேலம் மாநகராட்சி மேயா் ராமச்சந்திரன், எஸ்.ஆா்.பாா்த்திபன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினா்கள் இரா.இராஜேந்திரன், சதாசிவம், இரா.அருள், முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி, துணை மேயா் மா.சாரதாதேவி, மண்டல குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.









