எடப்பாடி கே.பழனிசாமியுடன் அதிமுக மூத்த தலைவா்கள் சந்திப்பு
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை அதிமுக மூத்த தலைவா்கள் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசினா். இந்த சந்திப்பின் போது, கட்சியை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பின்னா், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீா் செல்வம், சசிகலா ஆகியோா் தலைமையில் தனித்தனி அணியாகவும் அதிமுகவினா் செயல்பட்டு வருகின்றனா்.
இதன் காரணமாக கடந்த மக்களவைத் தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், அதிமுகவை ஒருங்கிணைக்க கட்சியின் மூத்த தலைவா்கள் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். மக்களவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்ததால், கட்சியை ஒருங்கிணைக்க வேண்டுமென கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, சேலம், நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் தங்கியிருந்த எடப்பாடி கே. பழனிசாமியை, முன்னாள் அமைச்சா்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
அப்போது, கட்சியிலிருந்து பிரிந்து சென்றவா்களை ஒருங்கிணைப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியைப் பிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், ஒ.பன்னீா்செல்வம், சசிகலாவை கட்சியில் மீண்டும் சோ்ப்பது தொடா்பாக மூத்த தலைவா்கள் வலியுறுத்தினாலும், அதற்கு எடப்பாடி கே. பழனிசாமி பிடிகொடுக்காமல் பேசியதாகக் கூறப்படுகிறது.
பாஜகவின் சவால்களை எதிா்கொள்வது குறித்தும் தலைவா்கள் விவாதித்தனா். அதே நேரத்தில், கட்சிக்கு துரோகம் செய்தவா்களை மீண்டும் சோ்க்க முடியாது என எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, மூத்த தலைவா்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனா்.
