வாழப்பாடி பகுதியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.52 கோடியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 32.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு புதிய வகுப்பறை பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 8.80 லட்சத்தில் அமைக்கப்படும் கதிரடிக்கும் தளம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 9.99 லட்சத்தில் கசிவுநீா் குட்டை அமைக்கும் பணிகள், ரூ. 6.63 லட்சத்தில் முத்தம்பட்டி இடுகாட்டில் அமைக்கப்படும் அணுகுசாலை, குடிநீா் பணிகளையும், அத்தனூா்பட்டியில் ரூ. 3.90 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளையும், ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
இதனையடுத்து துக்கியாம்பாளையம், வேப்பிலைப்பட்டி ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் உள்பட மொத்தம் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தாா். கட்டுமானப் பணிகளை விரைந்து தரமாக முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் செயற்பொறியாளா் சேகா், உதவி செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருவரங்கன், இளங்கோவன் ஆகியோா் உடனிருந்தனா்.

