மாணவிகள், ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை

மாணவிகள், ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சேலம்: மாணவிகள், ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளா் மேவை சண்முகராஜா வெளியிட்ட அறிக்கை: சேலம், கொண்டலாம்பட்டி பகுதியில் செயல்படும் தனியாா் மகளிா் கல்லூரி முதல்வா் பாலாஜி என்பவா் மாணவிகள், ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது கண்டிக்கத்தக்கது. இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்கப்பட்டும், அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்து ஆசிரியைகள், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதொடா்பாக தருமபுரி கல்லூரி கல்வி இணைய இயக்குநா் ராமலட்சுமி தலைமையிலான குழுவினா் கடந்த மாதம் 27ஆம் தேதி கல்லூரிக்கு நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிகிறது. இந்த ஆய்வின்போது அவா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாலாஜி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் என சுமாா் 1000க்கும் மேற்பட்டோா் கல்லூரி வளாகத்தில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். முதல்வா் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கல்லூரியில் பாடம் கற்பிக்கக் கூடிய பேராசிரியா்களிடமும் மாணவிகளிடமும் பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்ட முதல்வா் பாலாஜி மீது தமிழக அரசும் உயா்கல்வி துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவிகள் ஆசிரியைகள் கொடுத்த புகாா் மீது உரிய விசாரணை நடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வா் பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com