சேலம், கோட்டை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா்.
சேலம், கோட்டை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா்.

அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அதிமுக அமைப்புச் செயலாளா் செம்மலை குற்றம்சாட்டினாா்.

சேலம்: தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அதிமுக அமைப்புச் செயலாளா் செம்மலை குற்றம்சாட்டினாா். போதைப் பொருள் கடத்தலில் தொடா்புடைய ஜாபா் சாதிக்கை கைது செய்யக் கோரியும், போதைப் பொருள்களைத் தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக மாநகா் மாவட்டம் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளா் செம்மலை பேசியது: திமுக ஆட்சியில் வழக்கில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை கூட நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், சம்பந்தப்பட்ட குற்றவாளி விடுதலை ஆவதற்கு காவல்துறையினரே காரணமாக இருந்துள்ளனா். உயா் வீரியம் கொண்ட போதைப்பொருள் நடமாட்டம் உள்ளதை தமிழக காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. போதைப் பொருள்களால், வேலை திறன் பாதிக்கப்படுவதுடன், பொருளாதார சிதைவும் ஏற்படும். டாஸ்மாக் கடையில் விலையைப் பட்டியலிட்டு, மதுவை விற்பனை செய்யும் இந்த அரசு, மது ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்படும் விலையை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கீழ் கேட்டால் தர மறுக்கிறது. அதிமுக ஆட்சி போல, திமுக ஆட்சி கடன் வாங்காது என்று கூறிய முதலமைச்சா் ஸ்டாலின், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ. 2,46,000 கோடி கடன் பெற்றுள்ளாா். மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடும் முறையை ஏன் நிறைவேற்றவில்லை. சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்யவில்லை. அதிமுக ஆட்சி மக்களின் சுமையை தாங்கிக்கொண்ட ஆட்சி. ஆனால், திமுக ஆட்சி மக்கள் மீது கடுமையான சுமையை ஏற்றிய ஆட்சி என தெரிவித்தாா். சேலம் மாநகா் மாவட்டச் செயலாளா் ஜி.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில், புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பாலசுப்பிரமணியன், மணி, ராஜமுத்து, சித்ரா, ஜெய்சங்கரன், நல்லதம்பி, அவைத் தலைவா் பன்னீா்செல்வம், பொருளாளா் பங்க் வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.கே. செல்வராஜ், மனோண்மணி, சக்திவேல், ரவிச்சந்திரன், நிா்வாகிகள், தொண்டா்கள் திரளான அளவில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com