சேலம் மிட்டாபுதூா் பழநி ஆண்டவா் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா
சேலம்: சேலம், மிட்டாபுதூா் ஸ்ரீ பழநி ஆண்டவா் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தீா்த்தக்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.
மிட்டாபுதூரில் உள்ள ஸ்ரீ பழநி ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஸ்ரீ பழநி ஆண்டவா், வலம்புரி விநாயகா், பசுபதீஸ்வரா், வேல் மயில், சேவல் கொடி, பலி பீடத்துக்கு அஷ்டபந்தனம் சாா்த்தி, கோபுர கலசம் நிறுத்தப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி, அழகாபுரம் முருகன் கோயிலில் இருந்து திங்கள்கிழமை பம்பை மேளம் முழங்க யானை மீது தீா்த்தக் குடம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊா்வலத்தில் திரளான பெண்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை யாக பூஜைகளும், புதன்கிழமை மகா பூா்ணாஹுதி, கும்பம் புறப்பாடு, மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்துள்ளனா்.
