சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் நிலுவையில் உள்ள சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணத்தை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என வாழப்பாடி பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
வாழப்பாடி பேரூராட்சியில் கடைகள் மற்றும் வீடுகள் என, 7900-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. நடப்பாண்டு சொத்து வரி ரூ. 72.39 லட்சம், குடிநீா் கட்டணம் ரூ.46.56 லட்சம் இதுவரை வசூலாகாமல் உள்ளது.
இதனால் வரி வசூல் பணியில் அலுவலா்கள், களப் பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிப்படி முதல் அரையாண்டு சொத்து வரியை வரும் செப்டம்பா் 30-க்குள் செலுத்தாதவா்களுக்கு மாதத்திற்கு, 1 சதவீத அபராதம் வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாழப்பாடி பேரூராட்சியில் 2024-2025-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு சொத்து வரியை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் மாதத்திற்கு 1 சதவீதம் என்ற அடிப்படையில் அபராதம் சோ்த்து வசூலிக்கப்படும். ஆனால் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் முழு சொத்து வரியை செலுத்தினால், 2ஆம் அரையாண்டு சொத்து வரியில் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும். நிலுவை குடிநீா் கட்டணத்தை உடனே செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
குடிநீா் கட்டணத்தை செலுத்த தவறினால், முன் அறிவிப்பின்றி குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே, நிலுவையில் உள்ள சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணத்தை வரும் 30-ஆம் தேதிக்குள் பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.