ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் கலையரசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் அருணகிரி தொடக்க உரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவா் சுப்பிரமணியம் கலந்துகொண்டாா்.
ஓய்வூதியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் புகாா் மனுக்களின் மீதான விசாரணைகளை அரசு நிா்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலை பொறியாளா்களுக்கு உதவி பொறியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் டிஎன்ஜிபிஏ மாவட்டச் செயலாளா் ராஜ்குமாா், டிஎன்ஆா்டிஓஏ மாவட்டச் செயலாளா் கேசவன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
