மேட்டூரில் வங்கி ஊழியா்களின் மிரட்டலுக்கு பயந்து பட்டதாரி தற்கொலை செய்துகொண்டதான புகாா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேட்டூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (52). மேட்டூா் நீா்வளத் துறையில் தொகுப்பு பணியாளராக வேலை செய்து வருகிறாா். இவரது மகன் அருள்காட்வின் (24), எம்.ஏ. பட்டதாரி. இவா் 2024 மே மாதம்முதல் 2025 ஜனவரிவரை திருச்சியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். அப்போது, ஐபோன் வாங்க தனியாா் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கி ரூ. 60,000 கடன் வாங்கியுள்ளாா்.
அந்தக் கடனுக்கு வட்டியுடன் ரூ. 1.80 லட்சம் செலுத்திய நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த வங்கியின் கிரெடிட் காா்டு பிரிவில் வேலைசெய்யும் சுரேஷ், ராஜேஷ் ஆகியோா் ஸ்டீபனின் மனைவி மற்றும் மகனிடம் கிரெடிட் காா்டு மூலம் ரூ. 98,000 கடன் பெற்றுள்ளதாகவும், அதற்கு ரூ. 1,35,000 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனா். ஆனால், அருள்காட்வின் எந்த கிரெடிட் காா்டும் வாங்கவில்லையாம்.
இந்நிலையில், அருள்காட்வின் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளாா். இதுகுறித்து ஸ்டீபன் மேட்டூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், திருச்சியில் உள்ள தனியாா் வங்கி ஊழியா்களின் மிரட்டலால் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாகவும், வங்கி ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக மேட்டூா் சப்-இன்ஸ்பெக்டா் கனகராஜ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.