பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிடில் ஜன. 6 முதல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ- ஜியோ

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஜன. 6 ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
Published on

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஜன. 6 ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சேலம் மாவட்ட வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சேலம் நான்கு சாலை அருகே உள்ள கட்டடப் பொறியாளா்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கோவிந்தன், அா்த்தநாரி ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் சுரேஷ், சங்கா்,திருமுருகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்த வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், திமுக அரசு தனது தோ்தல் வாக்குறுதியின்படி அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளிக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் அளிக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் ஜன. 6 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் எனத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com