சேலத்தில் தம்பி கொலை: அண்ணன் தலைமறைவு
சேலம் பொன்னமாபேட்டையில் தம்பியைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான அண்ணனை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேலம் பொன்னமாபேட்டை ரயில்வே லைன் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் தியாகராஜன் (37), கூலித் தொழிலாளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இவருக்கும், அவரது அண்ணன் சந்தோஷுக்கும் (45) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
தியாகராஜனும், சந்தோஷும் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனா். ரயில்வே லைன் வடக்கு தெருவில் உள்ள அவா்களின் தாயை பாா்ப்பதற்கு இருவரும் அவ்வப்போது வந்து சென்றனா். அப்போது, அவா்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தியாகராஜனும், சந்தோஷும் தாயைப் பாா்ப்பதற்காக வந்தனா். அங்கு, இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்தோஷ் கட்டையால் தியாகராஜனை தாக்கியுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த தியாகராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதனால், அதிா்ச்சியடைந்த சந்தோஷ், தனது தம்பியைக் கொலை செய்துவிட்டதாக உறவினா்களுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பினாா்.
தகவலறிந்து அங்குவந்த அம்மாபேட்டை போலீஸாா், தியாகராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், தப்பியோடிய சந்தோஷை தேடிவருகின்றனா்.
