இன்றும், நாளையும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு தகுதித்தோ்வு
சேலம் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான ஆசிரியா் தகுதித்தோ்வு நவ. 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
இடைநிலை ஆசிரியா் மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணிநாடுநா்களுக்கான ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவை தமிழகம் முழுவதும் முறையே வரும் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.
ஆசிரியா் தகுதித்தோ்வுக்கான தாள் ஒன்று சேலம் மாவட்டத்தில் 15-ஆம் தேதி 12 மையங்களில் நடைபெறவுள்ளது. இதில் 4,646 தோ்வா்கள் தோ்வெழுத உள்ளனா். இவா்களில் 104 மாற்றுத்திறனாளி தோ்வா்களும், சொல்வதை எழுதுபவா் துணையுடன் 10 தோ்வா்களும் எழுத உள்ளனா்.
ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் 2-ஐ சேலம் மாவட்டத்தில் 16-ஆம் தேதி 48 மையங்களில் நடைபெறவுள்ளது. இதில் 18,847 தோ்வா்கள் தோ்வெழுத உள்ளனா். இவா்களில் 291 மாற்றுத்திறனாளி தோ்வா்களும், சொல்வதை எழுதுபவா் துணையுடன் தோ்வெழுதும் 74 தோ்வா்களும் எழுத உள்ளனா்.
தோ்வா்களுக்கான அறிவுரைகள் அவா்களுக்கான அனுமதிச் சீட்டில் வழங்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணிக்குமேல் வருகைபுரியும் தோ்வா்கள் கண்டிப்பாக தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றாா்.
