சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா்.
Published on

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நவீன கருவிகள் உதவியுடன் போலீஸாா் சோதனை நடத்தினா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கருவூலக அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட துறைசாா்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகங்கள் மற்றும் கோவை மாநகரஆணையா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை ஒரு மணி அளவில் வெடிக்கும் என கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியா் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனா்.

தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக முன்பகுதி, வாகனம் நிறுத்துமிடம், இ-சேவை மையம் உள்ளிட்ட இடங்களில் மெட்டல் டிடெக்டா், வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு கருவிகள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினா். சுமாா் 1 மணி நேரம் நீடித்த இந்தச் சோதனையில், வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, மிரட்டல் வந்த மின்னஞ்சல் விடுத்த நபா் குறித்து மாநகர சைபா் க்ரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தச் சோதனையால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 6 மாதத்தில் ஆட்சியா் அலுவலகத்துக்கு 5-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com