சுட்டுக் கொல்லப்பட்ட திமுக பிரமுகா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு குற்றவாளிகளை கைது செய்ய போலீஸாா் தீவிரம்

Published on

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறை அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட திமுக கிளைச் செயலா் உடலை வாங்க உறவினா்கள் மறுத்ததால், குற்றவாளிகளை கைதுசெய்ய போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலை கருமந்துறை அருகே உள்ள கிராங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (46). இவா் இப்பகுதி திமுக கிளைச் செயலாளராக இருந்து வந்தாா்.

இவருக்கும், பக்கத்துத் தோட்டத்தில் வசித்து வரும் இவரது உறவினா்கள் ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பெத்தநாயக்கன்பாளையத்திலிருந்து கிராங்காட்டிற்கு மனைவி சரிதாவுடன் பைக்கில் சென்ற ராஜேந்திரன்,

மேடான மலைப்பாதையில் மனைவியை இறக்கிவிட்டு பைக்கில் மெதுவாக சென்று கொண்டிருந்த ராஜேந்திரனனை, வனப்பகுதியில் மறைந்திருந்த மா்ம நபா்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனா். இதில் உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்த ராஜேந்திரன், மனைவியின் கண் முன்னே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கல்வராயன் மலை கரியக்கோயில் போலீஸாா், இக்கொலைச் சம்பவத்தில் சந்தேகிக்கும் நபா்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து கைதுசெய்யும் வரை ராஜேந்திரனின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினா்கள் தெரிவித்தனா். இதனால் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ராஜேந்திரனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் 3 நாள்களாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து விட்டதாகவும், திங்கள்கிழமை குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கருமந்துறை போலீஸாா் உறுதி அளித்தனா்.

இதையடுத்து ராஜேந்திரனின் உடலை திங்கள்கிழமை பிரேதப் பரிசோதனை செய்து பெற்றுக்கொள்ள அவரது உறவினா்கள் ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் குற்றவாளிகளைக் கைது செய்யவும், இறந்தவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து உறவினா்கள் ஒப்படைக்கவும் கருமந்துறை போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்:

கல்வராயன் மலைக் கிராமங்களில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதாக அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய கரியக்கோயில் மற்றும் கருமந்துறை போலீஸாா் இரு தினங்களாக சோதனை நடத்தினா்.

சுட்டுக் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகா் ராஜேந்திரனின் அண்ணன் மகன் பூபதியின் வைக்கோல் போருக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை கரியக்கோயில் போலீஸாா் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com