சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த வாழப்பாடியைச் சோ்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் நெஞ்சுவலியால் உயிரிழந்தாா். இவரது உடல் 21 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஓலப்பாடியைச் சோ்ந்தவா் கண்ணதாசன் (58). மல்லிகரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்த இவா், வாழப்பாடி அய்யாவுகவுண்டா் தெருவில் மனைவி சிவகாமி, மகன் ஹரிபிரசாத், மகள் சங்கீதப்பிரியா ஆகியோருடன் வசித்து வந்தாா். இவருக்கு, கெங்கவல்லி தொகுதி நாகியம்பட்டியில் தோ்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பணியில் இருந்த இவருக்கு வியாழக்கிழமை மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இவரை மீட்ட சக போலீஸாா், கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னாம்பள்ளி தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இச்சம்பவம் போலீஸாா் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சேலம் அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்கு பிறகு வெள்ளிக்கிழமை மாலை இவரது உடல் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. அவரது உடலுக்கு, கோவை மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி தலைமையில் சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமாணி, சேலம் எஸ்பி கௌதம் கோயல், வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், ஆய்வாளா் வேல்முருகன் மற்றும் போலீஸாா் மலா் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினா்.
அவரது மனைவி சிவகாமி மற்றும் குடும்பத்தினருக்கு காவல் உயரதிகாரிகள் ஆறுதல் கூறினா். அரசியல் கட்சி பிரமுகா்கள், உறவினா்கள், நண்பா்கள் என பலரும் இறுதி ஊா்வலத்தில் பங்கேற்றனா். வாழப்பாடி அருகே முத்தம்பட்டி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கண்ணதாசனின் உடலுக்கு அரசு சாா்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
படவரி:
பி.ஐ.ஜி.01,02:
தோ்தல் பணியின்போது இறந்த எஸ்எஸ்ஐ கண்ணதாசனின் உடலுக்கு மரியாதை செலுத்திய கோவை மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி தலைமையிலான போலீஸாா்.
தொடர்புடையது

லாரி மீது மோதிய அரசு விரைவுப் பேருந்து: ஓட்டுநா் உள்பட 11 போ் காயம்

இயக்குநா் பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்

தந்தையைக் கொன்ற மகன் கைது

மகள் கொலை வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வந்த தந்தை கொலை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



