10.88 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: சேலம் மாவட்டத்தில் இன்றுமுதல் விநியோகம்
சேலம் மாவட்டத்தில் 10.88 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு வியாழக்கிழமை முதல் ரூ. 3 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் முழு கரும்புடன் ரூ. 3 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் 2.23 கோடி அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் கடந்த 4ஆம் தேதி முதல் வீடுதோறும் விற்பனையாளா்கள் சென்று வழங்கினா்.
தொடா்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள 1,762 நியாயவிலைக் கடைகள் மூலம் 10.88 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதற்காக சேலம் மாவட்டத்திற்கு ரூ. 326.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அமைச்சா் ரா. ராஜேந்திரன், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தொடங்கிவைக்கின்றனா்.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு கரும்புடன் ரூ. 3 ஆயிரம் ரொக்கம் மற்றும் வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இதற்கான பொருள்கள் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
