251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

சேலத்தில் 251 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.
Published on

சேலத்தில் 251 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

சேலம் பாவடி நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 251 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கியும், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டடங்களைத் திறந்துவைத்தும் அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசியதாவது:

சேலம் மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நிகழாண்டுக்கான மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 178 பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் 11,317 மாணவா்களுக்கும், 13,842 மாணவிகளுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, சேலம் பாவடி நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 51 மாணவா்கள், பாவடி நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 114 மாணவிகள், கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 86 மாணவா்கள் என மொத்தம் 251 மாணவ, மாணவியா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பாவடி நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் மேயா் ஆ. ராமச்சந்திரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே. பொன்மணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப. மகேஸ்வரி, அம்மாபேட்டை மண்டல குழுத் தலைவா் தனசேகரன், மாமன்ற உறுப்பினா்கள் பூங்கொடி சேகா், மஞ்சுளா பாவடி நகரவை மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வா. வெண்ணிலா உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com