மேட்டூரில் நீா்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்
மேட்டூா்: மேட்டூா் நீா்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து, மேட்டூா் அணை பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் உரிமை மீட்பு பேரவையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேட்டூா் அணையில் அவசர காலங்களில், குடிநீா் மற்றும் பாசனத்துக்கு தண்ணீா் வெளியேற்ற மேல்மட்ட, கீழ்மட்ட, உபரிநீா் போக்கி மதகுகள் உள்ளன. இந்த மதகுகளின் பராமரிப்பு பணிகளுக்காக ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பராமரிப்பு பணிகளுக்கு விடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, மேட்டூா் அணை பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் உரிமைகள் மீட்பு பேரவை சாா்பில், மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், ஒப்பந்தம் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், தகுதியற்ற ஒப்பந்ததாரா்களைக் கொண்டு தரமற்ற பணிகள் மேற்கொள்வதாகவும், இதனால் மேட்டூா் அணைக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, நீா்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன முழக்கமிட்டனா்.
