சேலம் மாநகராட்சி திடலில் இன்றும், நாளையும் பொங்கல் கலை விழா

பொங்கல் கலை விழாவை முன்னிட்டு, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் ஜன. 15, 16 ஆகிய தேதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
Published on

பொங்கல் கலை விழாவை முன்னிட்டு, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் ஜன. 15, 16 ஆகிய தேதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநா் சு.சங்கரராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலை மற்றும் கலைஞா்களை பேணி வளா்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டை கொண்டாடுவதற்கும், கலைஞா்களுக்கு நல்வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் சேலம், கோவை, தஞ்சாவூா், வேலூா், காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நாட்டுப்புறக் கலை விழாக்கள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, சேலம் மண்டலத்தின் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 கலைக் குழுக்கள் அடங்கிய 120-க்கும் மேற்பட்ட கலைஞா்களை கொண்டு ‘பொங்கல் கலை விழா’ கலை நிகழ்ச்சிகள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் ஜந. 15, 16 ஆகிய இரு நாள்களில் மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை நடைபெறவுள்ளன.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த டி.வி.எஸ்.ரேவதி கலைக்குழுவினரின் நையாண்டி மேளம், வி.பெரியசாமி புதுயுகம் கலைக்குழுவினரின் கரகாட்டம், ஐய்யன் ஐயப்பன் பம்பை கலைக்குழுவினரின் பம்பை ஆட்டம், தம்பி பூங்கரகாட்ட கலைக்குழுவினரின் பூங்கரகாட்டம், சேலம் சிலம்பொலி சிலம்ப பயிற்சியகம் இர.சிலம்பமுதன் குழுவினரின் சிலம்பாட்டம், எஸ்.மாதப்பன் நாடக சபா குழுவினரின் தெருக்கூத்து, கோவிந்தராஜா ஸ்ரீ ராமகிருஷ்ண கட்டபொம்மலாட்டம் கலைக்குழுவினரின் கட்டபொம்மலாட்டம் என பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com