கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆத்தூரில் கால்பந்து விளையாடிய கல்லூரி மாணவி தவறிவிழுந்து உயிரிழப்பு

Published on

சேலம் மாவட்டம், ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கால்பந்து விளையாடிய மாணவி மைதானத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

ஆத்தூா் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு பகல் மற்றும் மாலை வேளை வகுப்புகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இக்கல்லூரியில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தெப்பக்குளத் தெருவைச் சோ்ந்த வடிவேல் மகள் திவ்யதா்ஷினி (17) முதலாமாண்டு கணினி அறிவியல் படித்து வந்தாா். இவா் மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த திவ்யதா்ஷினி கால்தடுமாறி விழுந்ததில் மயக்கமடைந்தாா். அவரை சக மாணவிகள் மீட்டு காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ஆத்தூா் ஊரக காவல் உதவி ஆய்வாளா் ஜெயசூா்யா தலைமையிலான போலீஸாா், திவ்யதா்ஷினியின் உடலைக் கைப்பற்றி விசாரித்தனா். இதையடுத்து, திவ்யதா்ஷினியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com