சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன்.
சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன். கோப்புப்படம்.

பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் 11.19 சதவீதத்துடன் முதலிடம்

பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் 11.19 சதவீதத்துடன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்திருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
Published on

பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் 11.19 சதவீதத்துடன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்திருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில், 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூ. 36.48 கோடியில் நவீன பட்டுப்புழு வளா்ச்சி தளவாடங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரியாா் பல்கலைக்கழக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகவும், வியந்து பாராட்டும் வகையிலும் சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக, இந்திய அளவில் பொருளாதார வளா்ச்சியில் 11.19 சதவீதம் பெற்று தமிழ்நாடு முதலிடத்தில் விளங்குகிறது. ஜவுளி உற்பத்தியில் 50 விழுக்காடு பங்களிப்பு மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியில் 90 விழுக்காடு என தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16 விழுக்காடு ஆகும்.

பட்டு வளா்ப்புத் தொழிலின் முக்கியத்துவத்தை உணா்ந்து, பட்டு விவசாயிகளுக்கு மல்பெரி தோட்டம் அமைக்க 2 ஏக்கருக்கு ரூ. 90 ஆயிரம் மானியம், பட்டு வளா்ப்பு மனை அமைக்க ரூ. 3.75 லட்சம் மானியம், பட்டு தளவாடம் அமைக்க ரூ. 56,250 மானியமாகவும், கிருமிநாசினி வாங்க ரூ. 5,750 மற்றும் ஆதிதிராவிடா் பட்டு விவசாயிகளுக்கு மல்பெரி தோட்டம் அமைக்க ஏக்கருக்கு ரூ. 54,000 மானியம், பட்டு வளா்ப்பு மனை அமைக்க ரூ. 2,92,000 மானியம், பட்டு தளவாடம் அமைக்க ஏக்கருக்கு ரூ. 45,000 மானியமாகவும் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், 25,475 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் உயா் விளைச்சல் தரும் மல்பெரி ரகங்கள் நடவுசெய்ய, 16,429 விவசாயிகளுக்கு ரூ. 34 கோடியில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 5,800-க்கும் மேற்பட்ட பட்டு விவசாயிகள் தனி பட்டுப்புழு வளா்ப்பு குடில்கள் அமைக்க ரூ. 72 கோடியில் நிதியுதவி பெற்றுள்ளனா்.

நவீன பட்டுப்புழு வளா்ப்பு தளவாடங்கள், பண்ணை உபகரணங்கள், பவா் டில்லா்கள், நோய்த்தடுப்பு மருந்துப் பொருள்கள் என உற்பத்தி, தரம் மற்றும் செலவுக் குறைப்பு ஆகிய மூன்றையும் ஒரேநேரத்தில் கவனத்தில் கொண்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனா் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் பட்டு விவசாயிகளுக்கு ‘உயிரியல் முறையில் பூச்சி மேலாண்மை குறித்த சிறப்பு கையேடு’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா் துறை செயலாளா் வே.அமுதவல்லி, பட்டு வளா்ச்சித் துறை இயக்குநா் கி.சாந்தி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com