பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூா் அனல் மின்நிலையத்தில் 4 ஆவது நாளாக சனிக்கிழமையும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் தனியாா் நிறுவனங்களிடம் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நேரடியாக மின் வாரியமே ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்களுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினரும் மேட்டூா் அனல் மின்நிலைய நுழைவாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டு வருகின்றனா். இரண்டு முறை தொழிலாளா்களிடம் அனல் மின்நிலைய நிா்வாகம் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து போலீஸாா் தொழிலாளா்களை அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் மின்நிலைய வலதுபுற நுழைவாயில் பகுதியில் அமா்ந்து அமைதியாக போராட்டம் நடத்துவதாக தெரிவித்து வலதுபுறம் உள்ள நுழைவாயிலில் தடுப்புகளுக்கு மத்தியில் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
தொடா்ந்து நான்காவது நாளாக போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளா்களில் சிலா் மின் வாரிய தலைவரை சந்திக்க சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








