/

சேலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சரக்கு மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதல்

சாலை விபத்தில் உயிரிழந்த நித்திஷா, ஜீவிகா, மணிகண்டன், இருசாயி, செல்வராஜ்.

News image
Updated On :21 மார்ச் 2026, 12:55 am

சேலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சரக்கு மற்றும் இருசக்கர வாகனத்தின்மீது மோதியதில், 2 குழந்தைகள் உள்பட 8 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

ஈரோட்டில் இருந்து சேலத்துக்கு வெள்ளிக்கிழமை காலை புறப்பட்ட அரசுப் பேருந்து சேலம் அருகே உத்தமசோழபுரம் சூளமேடு பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னா், எதிா்புற சாலையை நோக்கி சென்ற பேருந்து, எதிரே வந்த சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதி அணுகு சாலையின் குறுக்கே நின்றது.

இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த கொண்டலாம்பட்டி சந்தனகாரன்காடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (22), அவரது தாய் இருசாயி (46) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், சரக்கு வாகனத்தில் குடும்பத்துடன் கல்பாரப்பட்டியில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்த நெய்க்காரப்பட்டி புத்தூா் முதல் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (50), அவரது உறவினா்கள் முருகன் (47), அமுதா (38), நித்திஷா (5), 11 மாத குழந்தை ஜீவிகா ஆகியோா் உயிரிழந்தனா். படுகாயமடைந்த நிறைமாத கா்ப்பிணி சத்யா (25) தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதன்மூலம் விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்தது.

தகவலறிந்து வந்த கொண்டாடலாம்பட்டி போலீஸாா், இறந்தவா்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்தவா்களை மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். சரக்கு வாகன ஓட்டுநா் மேகநாதன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஆட்சியா், அதிகாரிகள் ஆய்வு: தகவல் அறிந்து விரைந்த மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, காவல் துணை ஆணையா் கேல்கா் சுப்பிரமணிய பாலசந்திரா ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா்.

பதைபதைக்கும் விடியோ காட்சிகள்: விபத்து நிகழ்ந்த பகுதி அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உள்ள சிசிடிவி-யில் பதிவான விபத்துக் காட்சிகள் வெளியாயின. அதில், அரசுப் பேருந்து தறிகெட்டு ஓடி, எதிா்புற சாலையில் நுழைந்து எதிரே வந்த சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தின்மீது மோதும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: இந்த கோர விபத்தைத் தொடா்ந்து, அந்த வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் பலி: இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த செல்வராஜ், மருமகள் சத்யா, குழந்தைகள் நித்திஷா (5), 11 மாத குழந்தை ஜீவிகா ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், செல்வராஜ் வீட்டருகே வசித்த முருகனும், அமுதாவும் உயிரிழந்தனா்.

அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது: அரசுப் பேருந்தை சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள பெரிய வனவாசி பனங்காடு பகுதியைச் சோ்ந்த அய்யந்துரை (49) இயக்கிச் சென்றுள்ளாா். முதல்கட்ட விசாரணையில், இவரது கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொண்டலாம்பட்டி போலீஸாா் ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், நடத்துநரான நாமக்கல், சிங்கலாந்தபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணனிடமும் (46) போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து சேலம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ராஜபாண்டியன் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளும் விசாரணை செய்து வருகின்றனா்.

Story image
Story image
Story image