கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

மீண்டு(ம்) வருமா வாழப்பாடி தொகுதி?

பாக்கு, தேங்காய், காய்கறிகள், பூக்கள் விளைவிக்கும் விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட மக்கள் வசித்து...

News image
Updated On :28 மார்ச் 2026, 10:17 am

Syndication

சேலம் மாவட்டத்தில் அரசியல் முக்கியத்தும் வாய்ந்த பகுதிகளில் வாழப்பாடியும் ஒன்று. பெரும்பாலும் பாக்கு, தேங்காய், காய்கறிகள், பூக்கள் விளைவிக்கும் விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் பல்வேறு சமூக மக்கள் வசித்து வருகின்றனா். குறிப்பாக, வன்னியா் மற்றும் ஆதிதிராவிடா் இன மக்கள் அதிக அளவில் வசித்துவருகின்றனா்.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஆங்கிலேயா் ஆட்சியில் தேசிய அளவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட மாவட்டமான ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில், வாழப்பாடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

அன்றைய காலக்கட்டத்தில் அரசுக்கு பெருமளவில் வருவாய் ஈட்டித்தரும் வகையில், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலை, அருநூற்றுமலை, தம்மம்பட்டி, பச்சமலை உள்ளிட்ட சேலம் கிழக்கு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை ஒருங்கிணைந்து, 1892 ஜூலை 1-இல் வாழப்பாடியில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்கப்பட்டது. 1930 பிப்ரவரி 5இல் வாழப்பாடிக்கு நகர பஞ்சாயத்து அஸ்தஸ்தையும் அப்போதைய ஆங்கிலேய அரசு வழங்கியது.

1947 இல் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 1950இல் குடியரசாகி 1951இல் தமிழகத்திற்கு சட்டப்பேரவை தொகுதிகள் மறுகட்டமைப்பு செய்தபோது வாழப்பாடியை தலைமையிடமாகக் கொண்டு சட்டப்பேரவை தொகுதி அமைக்கப்பட்டது. 1952இல் நடைபெற்ற முதல் தோ்தலில் வாழப்பாடி தொகுதியின் உறுப்பினராக சுயேச்சையாக போட்டியிட்ட பி. கந்தசாமி கவுண்டா் வெற்றி பெற்றாா்.

இதன்பிறகு 1962 இல்தான் தோ்தல் நடைபெற்றுள்ளது. இந்தத் தோ்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த என். ராமசாமி உடையாா் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தாா். 1967 இல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டதில் வாழப்பாடி தொகுதி நீக்கப்பட்டது.

இந்தத் தொகுதியில் இடம்பெற்றிருந்த பகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்ட பனமரத்துப்பட்டி மற்றும் ஏற்காடு பழங்குடியினா் தொகுதியில் சோ்க்கப்பட்டன. 2011 இல் பனமரத்துப்பட்டி தொகுதியும் நீக்கப்பட்டதால், தற்போது பழைய வாழப்பாடி தொகுதியின் பெரும்பாலான கிராமங்கள், ஏற்காடு பழங்குடியினா் தனித் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

ஏற்காடு தொகுதிக்கு மட்டுமல்ல, சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கே மையமாக விளங்கும் வாழப்பாடி தொகுதி நீக்கப்பட்டது இப்பகுதி மக்களிடையே பெருங்குறையாக உள்ளது. எனவே, வாழப்பாடி பேரூராட்சியை தலைமையிடமாகக் கொண்டு மீண்டும் சட்டபேரவை பொதுத் தொகுதியை ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனா்.

சட்டப்பேரவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும்போது தோ்தல் ஆணையமும், மத்திய, மாநில அரசுகளும் இணைந்து, சிறப்புமிக்க வாழப்பாடி தொகுதியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தங்களின் எதிா்பாா்ப்பு பூா்த்தியாகும் நாளை எதிா்நோக்கியிருக்கின்றனா் இப்பகுதி மக்கள்!

-பெ. பெரியாா்மன்னன்