/

பி.காம்., கணினி அறிவியல் படிப்பில் மாணவர்கள் ஆர்வம்!

 மதுரை, மே 22 : இந்த கல்வி ஆண்டில் பெரும்பாலான மாணவ, மாணவியர் பி.காம்., பி.எஸ்சி. (கணினி அறிவியல்), பி.சி.ஏ. உள்ளிட்ட பிரிவுகளில் சேருவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:30 pm

வே.சுந்தரேஸ்வரன்

 மதுரை, மே 22 : இந்த கல்வி ஆண்டில் பெரும்பாலான மாணவ, மாணவியர் பி.காம்., பி.எஸ்சி. (கணினி அறிவியல்), பி.சி.ஏ. உள்ளிட்ட பிரிவுகளில் சேருவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

 கடந்த 14-ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து மதுரை, தேனி, விருதுநகர் உள்பட மதுரை மண்டலத்திற்குள்பட்ட 6 மாவட்டங்களில் உள்ள அரசு, சுயநிதிப் பிரிவு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 நகரில் மதுரைக் கல்லூரி, தியாகராஜர் கலைக் கல்லூரி, அரசு மீனாட்சி மகளிர், அமெரிக்கன் கல்லூரி உள்பட அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு கல்லூரிகளிலும் மாணவ, மாணவியர் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பப் படிவங்களை வாங்கிச் சென்றதைக் காணமுடிந்தது.

 சமீபகாலமாக உலகளவில் சந்தை, வர்த்தகத் துறை வளர்ச்சி அடைந்து வருவதன் காரணமாக, பி.பி.ஏ., பி.காம் உள்ளிட்ட பிரிவுகளில் சேர்வதற்கு மாணவ, மாணவியர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 தகவல்தொழில் நுட்பத் துறையில் அபரிமித வளர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பி.எஸ்சி. (கணினி அறிவியல்), பி.சிஏ. பாடப் பிரிவுகளில் சேருவதற்கு மாணவ, மாணவியரிடம் போட்டா போட்டி காணப்பட்டது.

 இந்நிலையில், கடந்த ஆண்டின் பிற்பகுதியில் உலகளாவிய பொருளாதாரச் சரிவு காரணமாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சாஃப்ட்வேர், பி.பி.ஓ. நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

 இதனால், கைநிறையச் சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் இப் பிரிவை எடுத்துப் படித்த மாணவர்களிடம் ஒருவித தேக்க நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கணினி அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டினர்.

 இந்த ஆண்டு பி.காம். படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக பி.எஸ்சி. (கணினி அறிவியல்) உள்ளிட்ட பிற படிப்புகளில் சேர மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். நிதி சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் பெருகி வருவதால் பி.காம்., பி.பி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்புவதாக மாணவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

 இதுகுறித்து தியாகராஜர் கல்லூரி முதல்வர் ஆர்.ராஜா கோவிந்தசாமி கூறுகையில், சுயநிதிப் பிரிவுகளில் பி.காம். பி.சி.ஏ., பி.எஸ்சி. (உயிரித் தொழில்நுட்பம்), பி.எஸ்சி. (கணினி அறிவியல்) உள்ளிட்ட சுயநிதிப் பிரிவுகளில் அதிகமாக விண்ணப்பப் படிவங்கள் விற்பனையாகியுள்ளன.

 எங்கள் கல்லூரிக்கு என்று தனி மதிப்பு உள்ளதால் அறிவியல் பிரிவுப் பாடங்களிலும் சேருவதற்கு மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோன்று பி.ஏ. (தமிழ்), பி.ஏ. (ஆங்கிலம்) உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கும் மாணவர்களிடம் வரவேற்பு உள்ளது என்றார்.

 மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநர் செ.பாண்டி கூறியதாவது:

 மதுரை மண்டலத்தில் உள்ள தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் 42 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் 38 சுயநிதிப் பிரிவு கல்லூரிகளும், 11 அரசுக் கலைக் கல்லூரிகளும் உள்ளன.

 கடந்தாண்டு மதுரை மண்டலத்தில் அரசுக் கல்லூரிகளில் 5 ஆயிரம் மாணவர்களும், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 13,200 மாணவர்களும், சுயநிதிப் பிரிவு கல்லூரிகளில் 11 ஆயிரம் மாணவர்களும் சேர்க்கப்பட்டனர்.

 இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பி.காம்., பி.எஸ்சி. (கணினி அறிவியல்) பிரிவுகளில் சேருவதற்கு மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பம் பெற்றுச் செல்வது தெரியவந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பி.பி.ஏ., பி.எஸ்சி. (இயற்பியல்), பி.எஸ்சி. (கணிதம்) உள்ளிட்ட பிரிவுகளில் சேர மாணவர்கள் விரும்புகின்றனர். மாணவர் சேர்க்கை விஷயத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றப்படுகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.