ல்
மதுரை, ஆக. 3: சாதிச் சான்றிதழ் கோரி சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கன் சமூகத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சிக்கு உள்பட்டது சமயநல்லூர். இங்குள்ள சத்தியமூர்த்தி நகரில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர், பெற்றோர் உள்பட சுமார் 300 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தங்களுக்கு உடனடியாக சாதிச் சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
இதுகுறித்து காட்டுநாயக்கன் சமூக மாவட்டச் செயலர் ஏ.பகவதி ஆறுமுகம் கூறியது:
நாங்கள் சுமார் 40 ஆண்டுகளாக சத்தியமூர்த்தி நகரில் வசித்து வருகிறோம்.
எங்களில் சுமார் 40 பேர் மட்டுமே சாதிச் சான்றிதழ் வைத்துள்ளனர்.
நாங்கள் வசிக்கும் பகுதியில் 1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயிலும் சுமார் 350 மாணவ, மாணவியர் உள்ளனர்.
சாதிச் சான்றிதழ் இல்லாததால் இவர்களுக்கு கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் இவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிறது.
எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக இந்தச் சமூகத்தினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாளில் மாவட்ட ஆட்சியரிடம் சாதிச் சான்றிதழ் கோரி காட்டுநாயக்கன் சமூக மக்கள் மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.