/

அனுமதியற்ற ஆட்டிறைச்சிக் கடைகளால் சுகாதாரக் கேடு பரவும் அபாயம்

ராமநாதபுரம்,ஆக. 1:    ராமநாதபுரம் நகரிலும், அருகே உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சியிலும் அனுமதியற்ற ஆட்டிறைச்சிக் கடைகளில், சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை விற்பதாகப் புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் நகரில

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:54 am

எஸ்.வி.எஸ்.ஜெக​ஜோதி.

ராமநாதபுரம்,ஆக. 1:    ராமநாதபுரம் நகரிலும், அருகே உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சியிலும் அனுமதியற்ற ஆட்டிறைச்சிக் கடைகளில், சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை விற்பதாகப் புகார் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் நகரில் சின்னக்கடைத் தெரு,எஸ்.எம். அக்ரஹாரம் சாலை,கேணிக்கரை மற்றும் பட்டணம்காத்தான் ஊராட்சியில் பாரதிநகர்,செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி ஆட்டிறைச்சிக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலும், சாலையோரங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன.

மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில், பாரதிநகரில் சாலையின் இருபுறங்களிலும் இக்கடைகள் இருக்கின்றன. கடைகளில் திறந்தவெளியிலேயே ஆடுகள் வெட்டப்படுகின்றன.

இதனால், காலை நேரங்களில் அப்பகுதி வழியாகச் செல்வோர் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.

ஒரு வயதுக்குக் குறைவான ஆட்டுக் குட்டிகளை வெட்டக் கூடாது என கால்நடை பாதுகாப்புச் சட்டம் இருந்தாலும், இதனை கடைக்காரர்கள் பொருட்படுத்துவதில்லை.

பெரும்பாலான கடைகளில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடைக்கு அருகேயே கட்டிப் போட்டுள்ளனர்.

இரு ஆண்டுகளுக்கு முன், ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்ட மிருகவதை தடுப்புச் சங்கம் தற்போது செயல்படவில்லை.

கடந்த சனிக்கிழமை மக்கள் நடமாட்டமுள்ள பகுதியிலேயே இறைச்சிக்காக மாடு ஒன்று வெட்டப்படுவதை அறிந்த நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று அதனை பறிமுதல் செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கடைகளில் இறைச்சிகள் கடைக்கு வெளியிலேயே தொங்கவிடப்படுவதால், அவற்றில் தூசி படிந்து மாசடைகிறது. அதனை பொதுமக்களும் வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் இறைச்சிக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்ட பின், மீண்டும் அதே இடத்தில் இறைச்சிக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 இதுகுறித்து,சுகாதார அலுவலர் சந்திரன் கூறியதாவது:

ஆடுகளை கண்ட இடங்களில் வெட்டக்கூடாது என்பதற்காக ரூ. 41 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக சந்தைக்கடை பகுதியில் ஆடடி சாலை கட்டப்பட்டு, அங்கு தினசரி 15 முதல் 30 ஆடுகள் வெட்டப்படுகின்றன. புதன், ஞாயிறு ஆகிய தினங்களில் 40 ஆடுகள் வரை வெட்டப்படுகின்றன. அவற்றைப் பரிசோதித்து முத்திரை வைத்தபின் தான் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பதாகப் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாடுகளை வெட்டுவோர் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்தில் வெட்டி பின்னர் இறைச்சியை நகருக்குள் கொண்டு வந்து விற்கலாம்.

ஆட்டிறைச்சிக் கடைகளில் சுகாதாரமான முறையில் இறைச்சி விற்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.