/

கூலி உயர்வு கோரி​ அப்பளத் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்

மதுரை, ஜன.19: கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாள்களாக அப்பளம் தயாரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மதுரை மாவட்டத்தில் அப்பளம் உற்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:51 am

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை, ஜன.19: கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாள்களாக அப்பளம் தயாரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மதுரை மாவட்டத்தில் அப்பளம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் அப்பளத் தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, ஜெய்ஹிந்த்புரம், விரகனூர் உள்பட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் பெண்களே அப்பளம் தயாரித்து வியாபாரிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் 25 ஆயிரம் தொழிலாளர்களும், 500 உற்பத்தியாளர்களும், 500 வியாபாரிகளும் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சில மாதங்களாகவே அப்பளம் தயாரிப்பதற்கான மூலப்பொருளாகக் கருதப்படும் உளுந்து விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு 100 கிலோ மூட்டை உளுந்து ரூ.3500 ஆக இருந்த நிலையில், தற்போது இதன் விலை ரூ.7,500 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இத்தொழில் கடும் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறது.

இந் நிலையில், கூலி உயர்வு கோரி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும் கடந்த 11}ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பளத் தயாரிப்புக் கூடங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

இதனால் சின்ன அனுப்பானடி, ஜெய்ஹிந்த்புரம் உள்பட பல பகுதிகளில் உள்ள

ஏராளமான அப்பளக் கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன.

இது குறித்து வைகை அப்பளத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஏ.பழனி, அப்பள உற்பத்தியாளர் சங்க துணைச் செயலர் டி.மந்திரிக்குமார் ஆகியோர் கூறியது:

ஒரு அப்பள வீசைக்கு வியாபாரிகள் ரூ.15 கூலி கொடுத்தனர். ஒரு நாளைக்கு சராசரியாக 7 வீசை அளவுக்கு மட்டுமே ஒரு நபர் அப்பளம் தயாரிக்க முடியும். அதாவது, 105 ரூபாய் மட்டுமே கூலியாகப் பெற முடியும்.

இரு ஆண்டுகளுக்கு முன்பு அப்பள வியாபாரிகள் ஒப்பந்தம் செய்தபோது 120 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.600 கூலியை உயர்த்திக் கொடுத்தனர். இந் நிலையில், கடந்த மாதம் 30}ம் தேதியுடன் அதற்கான செட்டில்மெண்ட் முடிந்துவிட்டது.

அதன்பிறகும் கூலி உயர்வு குறித்து பேசவில்லை. விலைவாசி உயர்வு அதிகரித்துவிட்ட காரணத்தால் இந்தமுறை கூலி உயர்வை ரூ.2,500 உயர்த்தித் தருமாறு கேட்டோம். ஆனால், கடந்த முறை போலவே இந்த முறையும் ரூ.600 மட்டுமே உயர்த்தி தர முடியும் என்கின்றனர்.

இதனால், எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாவட்ட அப்பள உற்பத்தியாளர்கள் சங்கம், வைகை அப்பளத் தொழிலாளர்கள் சங்கம், பேக்கிங் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்டவை இணைந்து இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காத பட்சத்தில் ஊர்வலம் மற்றும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இப் பிரச்னையை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடமும் கொண்டுசெல்ல உள்ளோம் என்றனர். வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 15 ஆயிரம் கிலோ அப்பள உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இத்தொழிலை சார்ந்த பிற தொழில்களும் உள்ளதால், வேலைநிறுத்தம் காரணமாக அவையும் பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தி பாதிப்பு காரணமாக கடைகளில் அப்பளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.