சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பாதிக்கப்பட்டுவரும் நூறு ஏக்கர் பரப்பிலான நீராதாரங்கள்: நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கு அரசு நடவடிக்கை தேவை

திண்டுக்கல், ஜூன் 25: நீரின்றி அமையாது உலகு என்பது உலக நியதி. இயற்கையின் படைப்பில் 3 பங்கு நீரும், ஒரு பங்கு நிலமும் கொண்டது இப்புவி. உயிரினங்கள் வாழ்வதற்காக இயற்கையே பல இடங்களில் நீராதாரங்களான குளம்,

Updated On :20 செப்டம்பர் 2012, 1:03 pm

திண்டுக்கல், ஜூன் 25: நீரின்றி அமையாது உலகு என்பது உலக நியதி. இயற்கையின் படைப்பில் 3 பங்கு நீரும், ஒரு பங்கு நிலமும் கொண்டது இப்புவி. உயிரினங்கள் வாழ்வதற்காக இயற்கையே பல இடங்களில் நீராதாரங்களான குளம், குட்டை, ஏரி ஆகியவற்றை உருவாக்கி உள்ளது.

  இவற்றைப் பாதுகாக்கும் பணியை முன்னோர் செய்து வந்துள்ளனர். சில ஆண்டுகளாக இவற்றைப் பராமரிக்கும் பணியை நாம் மேற்கொள்ளாததன் விளைவு தண்ணீர் தட்டுப்பாடு உருவாகி குடிநீருக்கே போராடும் நிலை வந்துள்ளது.

  திண்டுக்கல் நகர் பாறைகள் நிறைந்த பகுதி. 2000-ஆவது ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 2 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது இந் நகரம்.

  ஆத்தூர் காமராஜர் சாகர் அணையும், மழைக்காலம் மற்றும் வைகையில் தண்ணீர் திறந்து விடப்படும் காலங்களில் பேரணையும், தற்போது காவிரி குடிநீர்த் திட்டமும் நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யப் போராடி வருகிறது.

  நீராதாரங்களை சரியான முறையில் மேலாண்மை செய்யாத காரணத்தினால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் நகர் மக்கள் குடிநீர் போக இதர உபயோகங்களுக்கும் நகராட்சி மூலம் வழங்கப்படும் நீரையே பயன்படுத்துகின்றனர்.

  14.01 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நகரைச் சுற்றி அய்யன்குளம் (16 ஏக்கர்), கோபாலசமுத்திரம் (6 ஏக்கர்), பீக்குளம் (8 ஏக்கர்), கோட்டைக்குளம் (1 ஏக்கர்), பாறைக்குளம் (8 ஏக்கர்), சொக்கலிங்கன்நாயக்கன் குளம் (6 ஏக்கர்), சின்னான் குளம் (6 ஏக்கர்), லப்பார்குளம் (10 ஏக்கர்), அரண்மனைக்குளம் (39 ஏக்கர்) என மொத்தம் 100 ஏக்கர் பரப்பில் குளங்கள் நிலத்தடி நீருக்காக இருந்து வருகிறது.   திண்டுக்கல் நகரம் கிழக்கில் மேடாகவும், மேற்கில் பள்ளமாகவும் இருப்பதால் மழை நீர் சொக்கலிங்கநாயக்கன் குளத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு குளமாக நிரம்பி இறுதியில் அய்யன்குளத்தில் சேரும் வகையில் இயற்கை அமைப்பு இருக்கிறது.

  சுதந்திரப்போராட்டக் காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட சிவகங்கை ராணி வேலுநாச்சியாருக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த கோபாலசாமி நாயக்கர் படைகள் கொடுத்து உதவினார். இதற்கு கைமாறாக, நன்றி பாராட்டும் வகையில் உருவாக்கப்பட்டது தான் நகரின் மையப்பகுதியில் 2 பெரிய கிணறுகளை உள்ளடக்கிய கோபாலசமுத்திரம்.

  திண்டுக்கல் நகரின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் இதற்குப் பெரும் பங்கு உண்டு. 1970-ம் ஆண்டு முதல் கோபாலசமுத்திரத்தில் ஆக்கிரமிப்புகள் ஆரம்பமாகி தற்போது 2 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டது.

  இதேபோல் 8 ஏக்கர் பரப்பினைக் கொண்ட பீக்குளம் இன்று தூர்ந்துபோன நிலையில் இருக்கும் இடம் தெரியாமலும், கோட்டைக்குளம் மாசடைந்த நிலையிலும் உள்ளது.

  கோபாலசமுத்திரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திண்டுக்கல் சமூக விஞ்ஞான அமைப்பின் தலைவர் ஜி.சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

  இதைத் தொடர்ந்து 21.7.2007-ல் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தடி நீராதாரத் தேவைக்கான குளமாகப் பாதுகாக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து 21.2.2008-ல் கோபாலசமுத்திரத்தின் மேற்குக் கரை ஓரமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சில கடைகள் மட்டும் அகற்றப்பட்டன.

  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலாரின் தனிப்பட்ட முயற்சி காரணமாக இயற்கையை மீட்போம் என்ற திட்டத்தை உருவாக்கி மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள குளங்களை தூர்வாரி, நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களை ஒன்றோடு ஒன்றினை இணைக்கும் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியின் மூலம் குளங்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  திண்டுக்கல் நகரில் 100 ஏக்கர் அளவில் குளங்கள் இருந்தும் நீராதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கம், மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் நகரில் நிலத்தடி நீர் மேம்பாட்டை அரசு மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் கூறுகையில், நகரின் நீராதார அமைப்பினை மேம்படுத்த முடியாததற்குப் போதுமான நிதி வசதி இல்லாதது தான் காரணம். ஊராட்சிப் பகுதிகளில் தேசிய ஊரக வேலைத் திட்டம் இருப்பதனால் அந்த நிதியின் மூலம் குளங்களைத் தூர் வாரி, நீர்வழிப் பாதைகள் சரிசெய்யப்பட்டு குளங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பணி தற்போது 13 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தைப் பயன்படுத்த முடியாது. எனவே நகர், பேரூராட்சிப் பகுதிகளில் நீராதாரங்களை மேம்படுத்தத் தனி நிதி ஒதுக்கித் தரும்படி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது என்றார்.

  திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.100 கோடி மதிப்பில் வைகை அணையில் இருந்து நேரடியாகத் தனிக் குழாய் பதித்து தண்ணீர் வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காகப் பெருந் தொகையை செலவழிப்பதை விட சில லட்சங்களை செலவழித்து நகரின் குளங்களைத் தூர்வாரி நீர்வழிப் பாதையை மேம்படுத்தினாலும், ஆத்தூர் காமராஜர் சாகர் அணையில் சேர்ந்துள்ள சேற்றினை அகற்றினாலும் திண்டுக்கல் நகரின் தண்ணீர் தட்டுப்பாடு தீர்ந்துவிடும். அரசின் பார்வை நகருக்கு கிடைக்குமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.