புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

காரைக்குடி உழவர் சந்தை மேம்படுத்தப்படுமா ?

காரைக்குடி, டிச. 13: சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரமான காரைக்குடியில் உழவர் சந்தை முழுமையாக இல்லாமல், குறைந்த எண்ணிக்கையிலான கடைகளுடன் செயல்பட்டு வருகிறது.    காய்கறி விவசாயிகளுக்கு நியாயமான விலை க

Updated On :19 செப்டம்பர் 2012, 10:08 pm

காரைக்குடி, டிச. 13: சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரமான காரைக்குடியில் உழவர் சந்தை முழுமையாக இல்லாமல், குறைந்த எண்ணிக்கையிலான கடைகளுடன் செயல்பட்டு வருகிறது.

   காய்கறி விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், பொதுமக்களுக்குத் தரமான காய்கறிகள் சரியான விலையில் கிடைக்கச் செய்யவும், வோளாண்மை பொருள்கள் விற்பனை மற்றும் வர்த்தகப் பிரிவு மேற்பார்வையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

  காரைக்குடி புதிய பஸ் நிலையம், நகராட்சி அலுவலகம் உள்ள பகுதியின் எதிர்புறத்தில் சுமார் 50 சென்ட் பரப்பளவிலான இங்கு தொடக்கத்தில் 60 கடைகள் அமைக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உழவர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. 21.2.2000-ல் இந்த உழவர் சந்தை தொடங்கப்பட்டது.

  காரைக்குடி அருகே பெரியகோட்டை, சிறுகப்பட்டி, அரியக்குடி, மித்திரங்குடி, பாலாவயல், காளையார்கோவில் அருகே நுத்தங்கண்மாய் மற்றும் பள்ளத்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், முருங்கை, கீரை வகைகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இவர்கள் காய்கறிகளை அரசு பஸ்களில் இலவசமாக ஏற்றிவர அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்தது.

  தொடக்கத்தில் நன்றாகச் செயல்பட்ட போதிலும், பின் பெயரளவில் நடைபெறும் உழவர் சந்தையாக மாறியது. இதையடுத்து, 2006-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த உழவர் சந்தையின் மேற்குப் பகுதியில் இருந்த அறிவிப்பு பெயர்கொண்ட வளைவு வாயிலை வடக்குப் பகுதிக்கு மாற்றியமைத்து, மீண்டும் தொடக்கி வைக்கப்பட்டது.  

 ஆனால், தற்போது உழவர் சந்தையின் வாயில் கிழக்குப் பக்கமாக மாற்றப்பட்டுள்ளது.  பெயர்ப் பலகை இல்லை. 10-க்கும் குறைவான கடைகளில்தான் விவசாயிகள் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

  அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, சீசன் காலங்களில் 20 கடைகள் வரை காய்கறிகள் வைத்து விவசாயிகள் வியாபாரம் செய்வார்கள் என்றனர்.

   உழவர் சந்தையில் கடை நடத்தும் விவசாயிகள், நுகர்வோருக்கு இந்தப் பகுதியில் கழிப்பிட வசதி இல்லை எனவும் அங்கிருந்த விவசாயிகள் சிலர் கூறுகின்றனர்.

   நகரில் சந்தைப்பேட்டை, கழனிவாசல், வைரவபுரம் என 3 வாரச் சந்தைகள், 2 தினசரி காய்கறி மார்க்கெட்டுகள் இயங்குகின்றன. அத்துடன் நகரின் சில பகுதிகளில் சாலையோரங்களில் காய்கறிகளை வைத்து விற்பனை செய்கின்றனர்.

   இதுகுறித்து உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் செல்வராஜ் கூறியது: அண்மையில் தொடர்ந்து பெய்த மழையினால், பயிரிட்ட காய்கறிகள் அழுகி விட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கடைகள் குறைந்திருப்பதற்கு அதுதான் காரணம்.

  தற்போது மீண்டும் அவர்களுக்கு தோட்டக் கலைத் துறையினர் விதைகள் வழங்கியிருக்கிறார்கள். இன்னும் 35 நாளிலிருந்து 40 நாள்களுக்குள் காய்கறிகள் விளையும். அதைத் தொடர்ந்து உழவர் சந்தைக்கு விவசாயிகள் கூடுதலாக காய்கறிகளைக் கொண்டு வருவார்கள்.

   கழிப்பிட வசதி அமைக்க உயரதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். பெயர்ப் பலகை வைப்பது குறித்து நகராட்சியினரிடம் தெரிவித்துள்ளோம். அதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.