/

அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடிந்த நிலையில் சத்துணவுக் கூடம்

மதுரை, பிப்.10: மதுரை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு உணவு தயாரித்து வழங்குவதற்கான சத்துணவுக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து ஓராண்டாகியும் இன்னும் சீரமைக்கப்படாத நிலை உள்ளது (ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:21 am

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை, பிப்.10: மதுரை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு உணவு தயாரித்து வழங்குவதற்கான சத்துணவுக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து ஓராண்டாகியும் இன்னும் சீரமைக்கப்படாத நிலை உள்ளது (படம்).

 இதனால், பாதுகாப்பாற்ற சூழலில் உணவைத் தயாரித்து வழங்கி வருகின்றனர் இந்த மையத்தின் சத்துணவுப் பணியாளர்கள்.

 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வெள்ளிமலையான்குன்று பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு தயாரித்து வழங்குவதற்காக 1984-ம் ஆண்டு ஒரு சத்துணவுக்கூடம் அமைக்கப்பட்டது. தற்போது, இரு பெண் சத்துணவு ஊழியர்களும், ஒரு சத்துணவு அமைப்பாளரும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர்.

 1200 மாணவர்கள் படித்து வரும் இப்பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 300 மாணவர்கள் வரை இந்த உணவைச் சாப்பிடுகின்றனர்.

 இந்தப் பள்ளி உயர்நிலைப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுவிட்ட போதிலும், கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட இந்த இந்தச் சத்துணவுக்கூடம் மட்டும் சீரமைக்கப்படாமல் அப்படியே பாழடைந்து கிடக்கிறது.

 சிறிய சமையல்கூடத்தின் பக்கச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே சத்துணவுப் பணியாளர்கள் சமையல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இதனிடையே, ஓராண்டுக்கு முன்பு இந்த சத்துணவுக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால், மழைக் காலங்களில் உணவு தயாரிப்புக்கான அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. இதனால், பக்கத்து அறையில் பாதுகாத்து வருவதாக சத்துணவு அமைப்பாளர் ஒருவர் கூறினார்.

 இந்த அவலநிலை குறித்து சம்பந்தப்பட்ட அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தபோது, இதைச் சரிசெய்ய வேண்டியது பொதுப் பணித் துறையினர்தான் என்று அங்கிருந்த அதிகாரிகள் தட்டிக் கழித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 சத்துணவுப் பணியாளர் நியமனம், சத்துணவுக் கூடத்தை மேற்பார்வையிடுவது என்று பல்வேறு பணிகளைச் செய்துவரும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம், சத்துணவு அறை சீரமைப்பு என்று வரும்போது மட்டும் பொதுப் பணித் துறையினரிடம் செல்லுமாறு கூறுவது ஏன் என்கின்றனர் இத்துறை ஊழியர்கள்.

 இந்த விஷயத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று சிலர் யோசனை தெரிவித்துள்ள நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தைத் தாண்டி எப்படி எடுத்துச் செல்வது என்று தயக்கத்தில் உள்ளனர்

 இந்த மையத்தின் சத்துணவுப் பணியாளர்கள். இந்தப் பள்ளியில் மட்டும்தான் இந்த அவல நிலையா என்று கேட்டால், அருகில் உள்ள கொண்டையம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியின் சத்துணவுக் கூடத்தின் நிலையும் இதேதான் என்று முணுமுணுக்கின்றனர் சத்துணவு ஊழியர்கள்.

 இதுகுறித்து அலங்காநல்லூர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயபாலனிடம் கேட்டபோது, இந்த விஷயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று கூறினார்.

 இந்த அரசுப் பள்ளியானது மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலேயே விளையாட்டில் மாநில, தேசிய அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 பள்ளிகளில் அடிப்படை வசதிக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகக் கூறிவரும் தமிழக அரசு, அலங்காநல்லூர் அரசுப் பள்ளியில் சத்துணவுக் கூடத்தின் அவலநிலையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.