மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தும் குடிநீருக்காக ஒரு கி.மீ. தூரம் நடக்கும் மக்கள்

சிவகங்கை, ஜன. 8: குடிநீர் வசதிக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள தொட்டி உள்ளது. ஆனாலும், உடைகுளம் காலனி மக்கள் குடிநீருக்கு கிராம பொதுக் குளத்தையே நம்பி உள்ளனர்.  காளையார்கோவில் ஒன்றியம், உடைகுளம் ஊர
Updated on
1 min read

சிவகங்கை, ஜன. 8: குடிநீர் வசதிக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள தொட்டி உள்ளது. ஆனாலும், உடைகுளம் காலனி மக்கள் குடிநீருக்கு கிராம பொதுக் குளத்தையே நம்பி உள்ளனர்.

 காளையார்கோவில் ஒன்றியம், உடைகுளம் ஊராட்சியில் காட்டுப்புலி, காட்டுச்சூறை, ஒய்யவந்தான், பேச்சாத்தக்குடி, சோழவந்தான், உடைகுளம் ஆகிய கிராமங்கள் உள்ளன.

இவற்றில் உடைகுளம் காலனிக்கு குடிநீர் வசதிக்காக 2009-10-ம் ஆண்டில் மத்திய, மாநில தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

 ஆனால், கட்டப்பட்ட ஒன்றரை ஆண்டில் 20 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் வந்தது. அதற்குப் பிறகு தண்ணீர் வரவில்லை. நிலத்தடி நீரின் அளவை அறிந்து ஆழ்துளைக் கிணறு அமைக்காமல் ஏதோ ஓர் இடத்தில் அமைத்ததால் தண்ணீர் கிடைக்காமல் இந்த தொட்டி பயன்படாமல் உள்ளதாக கிராம மக்கள் கூறினர்.

 அருகில் உள்ள மற்றொரு தொட்டியிலிருந்து விநியோகம் செய்யப்படும் தண்ணீர், நாள்தோறும் மாலை வேளைகளில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குத்தான் வரும்.

குடிநீருக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராம பொதுக் குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது என்றார் இந்த கிராமத்தில் வசிக்கும் ரவிதேவபாரதி.

 இப்பகுதியில் 1000 லிட்டர் கொள்ளவுள்ள சின்டெக்ஸ் தொட்டி அமைத்து, அதற்கென தனியாக 80 அடி ஆழ ஆழ்துளைக் கிணறு அமைத்து, தனியாக மின் இணைப்பு கொடுத்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் ஓராண்டு மட்டுமே இது பயன்பாட்டில் இருந்தது. பின்னர் அதன் நிலத்தடி நீர் இறைக்கும் பம்ப்  பழுதடைந்ததால், கடந்த 7 ஆண்டுகளாக இதுவும் பயன்படாமல் உள்ளது.

 மக்களின் புகார் காரணமாக ஒரு பழைய கைப்பம்பு இங்கு பொருத்தப்பட்டது. அதைப் பயன்படுத்தினாலும் தண்ணீர் வரவில்லை. பல ஆண்டுகளாக நீர் இறைக்கப்படாததால் ஆழ்துளைக் கிணறு அடைபட்டுள்ளதாக இப்பகுதி பெரியவர் ஒருவர் தெரிவித்தார்.

இப்பிரச்னை குறித்து காளையார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி கூறுகையில், இத்திட்டங்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அமைக்கப்பட்டவை. இதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. கட்டிக் கொடுத்த குடிநீர் ஆதாரங்களை அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள்தான் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இதே ஒன்றியத்தைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) வீரப்பன் கூறுகையில், உடைகுளம் கிராம மக்களிடமிருந்து இதுவரை எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. இப்போது தகவல் தெரிந்துள்ளதால் உடனடியாக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com