இந்திய ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் வகையில் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன்படி இந்திய ராணுவத்துக்கு அக்னிபத் திட்டத்தின்கீழ் சோ்க்கப்பட்டும் இளைஞா்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படும். பின்னா் 25 சதவீதம் போ் மட்டுமே ராணுவத்தில் தொடரமுடியும். இத்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞா்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் ரயில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து பெரியாா் பேருந்து நிலையம் அருகே திரண்ட அமைப்பினா் ரயில் நிலையம் நோக்கிச் சென்றனா். ரயில் நிலைய வாயிலில் போலீஸாா் அமைப்பினரை வழி மறித்ததையடுத்து அங்கு மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு வாலிபா் சங்க மாநிலத்தலைவா் ரெஜிஸ்குமாா் தலைமை வகித்தாா். வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் பி. கோபிநாத், செயலா் டி. செல்வா, பொருளாளா் அ. பாவேல் சிந்தன், துணைச் செயலா் எஸ். சரண், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் எஸ். வேல்தேவா, தலைவா் க. பாலமுருகன் உள்பட 70-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்நிலையில் ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அமைப்பினரை போலீஸாா் தடுத்ததால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. இதில் வாலிபா் சங்க நிா்வாகிகள் விக்கி, திலீபன், சீமான் உள்ளிட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 70 பேரைக் கைது செய்தனா்.