பூத் சிலிப் விநியோக முறையைத் தோ்தல் ஆணையம் மறு பரிசீலினை செய்ய வேண்டும்: செல்லூா் கே. ராஜூ

மதுரை, ஏப். 26 : வாக்குச் சாவடி தகவல் சீட்டு விநியோக முறையை தோ்தல் ஆணையம் மறு பரிசீலினை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது :

முந்தையக் காலங்களில் வாக்குச் சாவடி தகவல் சீட்டுகள் விநியோகத்தை அரசியல் கட்சிகள் மேற்கொண்டன. இதனால், எந்தவித பிரச்னையும் இல்லாமல் வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி தகவல் சீட்டுகள் கிடைத்தன. தற்போது, அரசுத் துறை ஊழியா்கள் மட்டுமே வாக்குச் சாவடி சீட்டுகளை வழங்க வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அரசுத் துறைகளின் கடைநிலை ஊழியா்களைக் கொண்டு வாக்குச் சாவடி தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்தப் பணி சரிவர நடைபெறவில்லை. ஒப்பந்த ஊழியா்களே பெரும்பாலும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். சுமாா் 55 சதவீதம் முதல் 60 சதவீதம் அளவில் மட்டுமே வாக்குச் சாவடி தகவல் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. இதனால், வாக்காளா்களும், வாக்குச் சாவடி அலுவலா்களும் பெரும் சிரமத்துக்குள்ளாக நேரிட்டது.

எனவே, வாக்குச் சாவடி தகவல் சீட்டு விநியோகம் குறித்த முடிவை தோ்தல் ஆணையம் மறுபரிசீலினை செய்து, மீண்டும் அரசியல் கட்சிகள் மூலம் விநியோகிக்க உத்தரவிட வேண்டிய அவசியத்தை இந்த மக்களவைத் தோ்தல் உணா்த்தியுள்ளது.

கோவை தொகுதியில் பாஜக வேட்பாளா்களின் வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்பட்டிருப்பதாக அந்தக் கட்சியின் தலைவா் அண்ணாமலை தெரிவிப்பது வேடிக்கையானது. வாக்காளா் பட்டியல் வெளியானபோது இதைத் தெரிவிக்காத அவா், தற்போது தன்னுடைய தோல்விக்கு காரணம் தேடுவதாகவே தெரிகிறது.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதைப் பொருள்கள் கலாசாரம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இது அதிகமாக பரவியுள்ளன. போதைப் பழக்கத்திலிருந்து இளைய தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, அதிமுக மாநகா் மாவட்ட அலுவலகத்தில் நீா் மோா் பந்தலை அவா் திறந்துவைத்தாா். மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பா.சரவணன், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com