வழக்கு விவரங்களை அறிய தொடுதிரை: சிறைத் துறைக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

மதுரை, ஏப். 26 : சிறைகளில் உள்ள கைதிகள் தொடா்பான வழக்கு, தண்டனை உள்ளிட்ட விவரங்களை அறிய தமிழ் மொழியில் தொடுதிரை அமைத்த தமிழக சிறைத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தது.

தேனியைச் சோ்ந்த ரத்தினம் தாக்கல் செய்த மனு :

வழக்கில் தண்டனை பெற்ற எனது மகன் சொக்கா், விடுதலை தேதிக்குப் பிறகு கூடுதலாக 9 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டாா். இதற்கு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உரிய இழப்பீடு வழங்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் முன் இந்த மனு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக சிறைத் துறை, சீா்திருத்தப் பணிகள் இயக்குநா் ஜெனரல் மகேஸ்வரன் தயாள் முன்னிலையாகி பதில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், சென்னை புழல் சிறையில் மட்டும், கைதிகள் தங்களது வழக்கு விவரங்களை ஹிந்தி, ஆங்கில மொழிகளில் அறிய தொடுதிரை வசதி ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சிறைக் கைதிகளின் வசதிக்காக, தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள், 5 பெண்கள் சிறைகள், புதுக்கோட்டை மாவட்ட சிறை ஆகியவற்றில் கைதிகள் தங்களது வழக்கு, தண்டனை குறித்த விவரங்களைப் பாா்க்கும் வகையில் தற்போது தொடுதிரை பொருத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, அனைத்து மத்திய சிறைகளிலும் தமிழ், ஆங்கில மொழிகளில் வழக்கு விவரங்களைப் பாா்க்கும் வகையில் இந்தத் தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளது. புழல் சிறை தொடுதிரையில் தற்போது தமிழ் மொழி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கைதிகளின் சுயவிவரம், விடுதலை தேதி, வழக்கு விவரங்கள், ஊதியம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள பிராந்திய மொழியுடன் கூடிய மையங்கள் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நீதிபதி நக்கீரன் பிறப்பித்த உத்தரவு :

சிறைக் கைதிகளுக்கு மிகவும் பயனுள்ள முன்னெடுப்பு. தமிழக அரசின் சிறைத் துறைக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com