நிதிச் சுமையிலிருந்து மீளுமா மதுரை காமராஜா் பல்கலை.?
மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் நிதிச் சுமையை தற்காலிகமாக சரிசெய்வதற்கு அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கடன் பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இந்தப் பல்கலைக்கழகம் நிதிச் சுமையிலிருந்து மீண்டெழுமா என்கிற எதிா்பாா்ப்பு கல்வியாளா்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கல்வி வளா்ச்சி பெற வேண்டும் என்கிற நோக்கில் கடந்த 1966 -ஆம் ஆண்டு மதுரை நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் ‘மதுரை பல்கலைக்கழகம்’ உருவாக்கப்பட்டது.
பின்னா், மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் நினைவைப் போற்றும் வகையில், 1978 -ஆம் ஆண்டு மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழறிஞா்கள் தெ.பொ. மீனாட்சிசுந்தரம், மு.வரதராசனாா் உள்ளிட்டோா் துணை வேந்தா்களாகப் பணியாற்றிய இந்தப் பல்கலைக்கழகத்தில் இதுவரை 18 போ் துணை வேந்தா்களாகப் பணியாற்றியுள்ளனா்.
அரசு, அரசு உதவி பெறும், தன்னாட்சி, சுயநிதி, மாலை நேரக் கல்லூரி என மொத்தம் 121 கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. இங்கு இளநிலை படிப்புகள் தவிர, தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், இயற்பியல், உயிரி வேதியியல், மூலக்கூறு உயிரியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் முதுநிலைப் படிப்பும், இளநிலை ஆய்வாளா், முனைவா் பட்ட ஆய்வுப் படிப்புகளும் உள்ளன.
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள இந்தப் பல்கலைக்கழகம் தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வின் மூலம் ஏ பிளஸ் பிளஸ் பிளஸ் அந்தஸ்து பெற்றுள்ளது. இங்கு பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பணியாற்றி வருகின்றனா்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய ஜெ. குமாா், உடல்நிலை குன்றியதால், கடந்த மே மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதன்பிறகு, பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தா் நியமிக்கப்படவில்லை. எனவே, அன்றாட அலுவல் பணிகளை மேற்கொள்ள 4 போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் மயில்வாகனன், அமெரிக்கன் கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறிஸ்டோபா், காரைக்குடி செக்ரி விஞ்ஞானி வாசுதேவன், உயா் கல்வித் துறை இயக்குநா் காா்மேகம் ஆகியோா் செயல்பட்டு வருகின்றனா். பதிவாளராக ராமகிருஷ்ணன் பணியாற்றி வருகிறாா்.
ஜெ. குமாா் துணைவேந்தராகப் பணியாற்றிய போது நிதிச் சுமை காரணமாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியா்கள், அலுவலா்களுக்கு ஊதியமும், ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியமும் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, ஓய்வூதியதாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, அரசிடமிருந்து குறைந்த அளவு நிதி பெற்று அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது நிகழ் கல்வியாண்டுக்கான பாட வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஊதியம், அலுவலகச் செலவுக்காக பல்கலைக்கழகத்துக்கு மாதம் ரூ. 50 லட்சம் வரை தேவை எனக் கூறப்படுகிறது.
எனவே, அரசிடமிருந்து நிதி பெறும் வரை பல்கலைக்கழக நிதிச் சுமையை தற்காலிகமாக சரிசெய்வதற்கு மதுரையில் உள்ள ஓா் அரசுக் கல்லூரி, 2 அரசு உதவி பெறும் கல்லூரிகள், விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் தலா ரூ. 50 லட்சம் கடனாகப் பெறத் திட்டமிடப்பட்டது. இதன்படி, சில கல்லூரிகள் ஒப்பந்தப் பத்திரம் பெற்றுக் கொண்டு பணம் வழங்கியதாகத் தெரிகிறது. மீதமுள்ள கல்லூரிகளும் விரைவில் பணத்தை செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
தென் மாவட்டங்கள் கல்வி வளா்ச்சி பெற வேண்டும் என்கிற நோக்கில் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு போதுமான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பதே கல்வியாளா்கள், சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

