திருச்சி விமான நிலையத்தில் அடிப்படை வசதிகள்: இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருச்சி விமான நிலையத்தில் அடிப்படை வசதிகள்: இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Published on

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் காத்திருப்போருக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரிய வழக்கில், விமான நிலைய இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கோவிந்தராஜன் தாக்கல் செய்த மனு:

வெளிநாட்டுக்குச் சென்ற எனது நண்பரை வழியனுப்புவதற்காக திருச்சி சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கு நான் கடந்த மாதம் சென்றேன். அப்போது, பயணிகளை வழியனுப்பம் இடம், வரவேற்கக் காத்திருக்கும் இடங்களில் உணவு, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தேன். இதைத்தொடா்ந்து, குடிநீா், உணவு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை. எனவே, இந்த விமான நிலையத்தில் உரிய கழிப்பறை வசதியை ஏற்படுத்த விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருச்சி விமான நிலையம் தரப்பில், விமான நிலையத்தில் அனைத்து வகையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மனுதாரா் விமானத்தில் பயணிக்கவில்லை, வழி அனுப்புவதற்காக வந்தவா் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விமானத்தில் பயணம் செய்பவா்கள் மட்டும் மனிதா்கள் அல்ல, அவரை வழி அனுப்ப வருபவா்களும் மனிதா்கள்தான். எனவே, அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். விமான நிலையக் காத்திருப்போா் பகுதியில் கழிப்பறை வசதி செய்து தருவதே மனிதநேயமாக இருக்கும்.

எனவே, திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் கழிப்பறை அமைக்கும் பணிகள் எப்போது நிறைவடையும். இதுகுறித்து விமான நிலைய இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com