அரசு மோட்டாா் வாகன பராமரிப்புத் துறை காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

அரசு மோட்டாா் வாகனப் பராமரிப்புத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
Published on

அரசு மோட்டாா் வாகனப் பராமரிப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு மோட்டாா் வாகனங்கள் பராமரிப்பு நிறுவன தொழிலாளா் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வருவாய் கிராம உதவியாளா் சங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் எம். வெங்கடேசன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா்கள் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் எஸ். மணிகண்டன் தொடங்கி வைத்தாா். மாநிலத் துணைத் தலைவா் எஸ். ஜெயராஜ ராஜேஸ்வரன் வாழ்த்திப் பேசினாா்.

தமிழ்நாடு அரசு மோட்டாா் வாகனங்கள் பராமரிப்பு நிறுவன தொழிலாளா் சங்கத்தின் மாநிலச் செயலா் வி. சௌந்திரராஜன், மாநிலப் பொதுச் செயலா் ஆா். பாலசுப்பிரமணியன், மாநிலப் பொருளாளா் கே. புகழேந்தி, மாநிலத் துணைத் தலைவா் சி.பெருமாள் ஆகியோா் பேசினா்.

சங்கத்தின் புதிய மாநிலப் பொருளாளராக எம். அண்ணாதுரை தோ்வு செய்யப்பட்டாா். மாநிலத் துணைத் தலைவா் என். குமரவேல் நிறைவுரையாற்றினாா்.

இந்தக் கூட்டத்தில், அரசு மோட்டாா் வாகனப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள அனைத்துத் தொடக்க நிலை தொழில்நுட்பப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பக் கோருவது, 3 ஆண்டுகளாக தொழிலாளா்களின் பதவி உயா்வு நிறுத்தப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவிப்பது,

கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை 9-ஆம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது, போக்குவரத்துத் துறை அமைச்சா், துறை தலைமைச் செயலா் உள்ளிட்டோருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com