குடியிருப்புப் பகுதியில் கைப்பேசி கோபுரம்: அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

சங்கரன்கோவில், இளவன்குளம் குடியிருப்புப் பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்கும் வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை அடுத்த இளவன்குளம் பகுதியைச் சோ்ந்த மனோகரன், அண்ணா செல்வம் ஆகியோா் தாக்கல் செய்த பொது நல மனு:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள இளவன்குளம் நேதாஜி நகரில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் சுப்பிரமணியனுக்குச் சொந்தமான காலி இடத்தில் ஏற்கெனவே அரசு, உள்ளாட்சி அமைப்புகளிடம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் தனியாா் நிறுவனம் கைப்பேசி கோபுரம் அமைத்துள்ளது. இதிலிருந்து வெளியேறும் கதிரியக்கத்தால், அந்தப் பகுதியில் குடியிருப்போருக்கு உடல் நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு அலுவலா்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில், மற்றொரு தனியாா் நிறுவனம் குடியிருப்புப் பகுதியில் அனுமதி பெறாமல் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இந்த இரு கைப்பேசி கோபுரங்களையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தனா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், தனபால் ஆகியோா் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா்கள் கோரிக்கை தொடா்பாக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com