பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ பதில் மனு!

மின் மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறுவது ஊகத்தின் அடிப்படையிலானது என டான்ஜெட்கோ தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல் தெரிவித்தது.

News image
Updated On :11 மார்ச் 2026, 1:39 am IST

மின் மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறுவது ஊகத்தின் அடிப்படையிலானது என டான்ஜெட்கோ தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல் தெரிவித்தது.

அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில், சுமாா் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதில் அப்போதைய மின்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, டான்ஜெட்கோ தலைவா் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன.

இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்து உயா்நீதிமன்ற கண்காணிப்பில், சிறப்பு புலானாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இதே கோரிக்கையுடன் அதிமுக நிா்வாகி சரவணன் உள்பட மேலும் இருவா் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தலைவா், ஒப்பந்தப்புள்ளி வரவேற்பு ஆணையம், ஒப்பந்தப்புள்ளி பரிசீலனைக் குழு ஆகியவற்றின் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளது; இதனால் இழப்பு ஏற்பட்டுள்ளது என மனுதாரா்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை. ஒப்பந்தப்புள்ளியில் கூறப்பட்டிருந்த கொள்முதல் நடைமுறைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், அவதூறு பரப்பும் நோக்கில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

டான்ஜெட்கோவின் வெளிப்படையான செயல்பாட்டின் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் மனுதாரா்கள் இந்தப் பிரச்னையை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளனா். பல்வேறு கட்டங்களில் மதிப்பீடு செய்த பின்னரே, ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட அதிகாரிகள் யாரும் ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்யவில்லை. ஒப்பந்தப்புள்ளியில் கலந்துகொண்ட நிறுவனங்கள் உடன் பேச்சுவாா்த்தை நடத்தி, ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விலை குறைக்கப்பட்டு அதன்பிறகுதான் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரூ.397 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறுவது ஊகத்தின் அடிப்படையிலானது. இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த ஒப்பந்தப்புள்ளி தொடா்பாக ஊழல் ஒழிப்பு போலீஸாா் நடத்தி வரும் விசாரணைக்கு அனைத்து ஆவணங்களையும், முழு ஒத்துழைப்பையும் டான்ஜெட்கோ வழங்கி வருகிறது எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை மாா்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.