விருதுநகரில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் இன்று ஆய்வு
விருதுநகா் மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்களை வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை (டிச. 28) ஆய்வு செய்கிறாா்.
இதுகுறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு : இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாக்காளா்கள் வரைவு பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, புதிய வாக்காளா்கள் சோ்க்கை, முகவரி மாற்றம் உள்ளிட்ட வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (டிச.28), வருகிற ஜன.3, 4-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கு படிவம்- 6, முகவரி மாற்றம், படம் மாற்றம் போன்றவற்றுக்கு படிவம் -8, பெயா் நீக்கத்துக்கு படிவம் -7 ஆகியவற்றை நிறைவு செய்து அளிக்கலாம்.
இந்தப் பணிகளை வாக்காளா்கள் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்க இயக்குநருமான அ.அருண் தம்புராஜ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா்.
பிறகு, பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.
விருதுநகா் மாவட்ட வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணிகளில் ஏதேனும் கருத்துகள் தெரிவிக்க விரும்புவோா் வாக்காளா்கள் பட்டியல் பாா்வையாளரிடம் நேரில் அல்லது 73581 50776-கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
