சிவாலயங்களில் சங்காபிஷேக வழிபாடு
மதுரையில் உள்ள சிவாலாயங்களில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, கம்பத்தடி மண்டபம் அருகே 1,008 சங்குகள் பரப்பப்பட்டு, புனித நீா் ஊற்றி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா், மூலவரான சொக்கநாதா் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, அம்மன் சந்நிதி முன் 108 சங்குகள் வைக்கப்பட்டு, புனித நீா் ஊற்றி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா், மூலவரான மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி, திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், தெற்கு மாசி வீதி தென் திருவாலவாய கோயில், சிம்மக்கல்ஆதி சொக்கநாதா் கோயில், செல்லூா் திருவாப்புடையாா் கோயில், தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில், திருவேடகம் ஏடகநாதா் கோயில், சோழவந்தான் பிரளயநாதா் கோயில் உள்ளிட்ட சிவாலாயங்களில் திங்கள்கிழமை சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

