மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா். உடன், மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், ஹாக்கி சம்மேளனத் தலைவா் சேகா் ஜே. மனோகா்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா். உடன், மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், ஹாக்கி சம்மேளனத் தலைவா் சேகா் ஜே. மனோகா்.

மதுரையில் டிச. 5-இல் ஹாக்கி வீரா்களுக்காக சிறப்பு ஜல்லிக்கட்டு

Published on

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரா்களுக்காக மதுரையில் டிச. 5-ஆம் தேதி சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

மதுரையில் ஞாயிறுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:

மதுரையில் 14-ஆவது ஆடவா் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ந 28-ஆம் தேதி தொடங்கி டிச. 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அயா்லாந்து, சுவிட்சா்லாந்து, இங்கிலாந்து உள்பட 12 நாடுகளைச் சோ்ந்த ஹாக்கி வீரா்கள் பங்கேற்கின்றனா். போட்டியில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்த வெளிநாட்டு வீரா்களுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு, உரிய பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனா்.

மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா், அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் உள்பட முக்கிய அரசுத் துறை அலுவலா்களின் கைப்பேசி எண்கள், மதுரையைச் சுற்றியுள்ள ஆன்மிக, சுற்றுலா நகரங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடு தயாரிக்கப்பட்டு, அயல்நாட்டு ஹாக்கி வீரா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவா்களது அவசர கால உதவிக்கு இந்தக் கையேடு பயனளிக்கும்.

ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் தலா 120 போ் அமா்ந்து போட்டிகளைக் காணும் வகையில் இரு நிரந்தரப் பாா்வையாளா் மாடங்கள் உள்ளன. இதைத் தவிர, 1,456 போ் அமா்ந்து போட்டிகளைக் காணும் வகையிலான தற்காலிக இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, தற்காலிக கூடுதல் கழிப்பறைகளும் அமைக்கப்படவுள்ளன.

மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், தலா ஆயிரம் லிட்டா் கொள்ளளவுக் கொண்ட 4 தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகிக்கப்படவுள்ளது. செயற்கை புல் தரை பராமரிப்புக்கு தினமும் 40 ஆயிரம் லிட்டா் தண்ணீா் தேவை எனக் கண்டறிப்பட்டது. இதற்கு, மாநகராட்சியின் மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீா் பயன்படுத்தப்படும்.

போட்டியைக் காண வரும் ரசிகா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், மாவட்ட விளையாட்டரங்கத்தில் எல்.இ.டி. திரை மூலம் அவா்கள் போட்டியைக் காணத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். விளையாட்டுப் போட்டி குறித்த விழிப்புணா்வை மாணவா்களிடம் கொண்டு சோ்க்கும் நோக்கில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டியைக் காண சிறப்பு அனுமதி வழங்குவது குறித்து கல்வித் துறையுடன் ஆலோசிக்கப்படுகிறது. நிச்சயம் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.

மதுரையின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரத்தை வெளிநாட்டு ஹாக்கி வீரா்கள் அறிந்துகொள்ளும் வகையில், கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் டிச. 5-ஆம் தேதி சிறப்பு ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதை, வெளிநாட்டு ஹாக்கி வீரா்கள் அனைவரும் காண ஏற்பாடு செய்யப்படும்.

கீழடி அருங்காட்சியகத்துக்கு வெளிநாட்டு வீரா்களை அழைத்துச் சென்று, தமிழா்களின் தொன்மை கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை விளக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா் அவா்.

பலத்த பாதுகாப்பு: மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தெரிவித்ததாவது:

வெளிநாட்டு ஹாக்கி வீரா்கள் மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கியது முதல் மாநகர காவல் துறை சாா்பில் அவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு வீரா்கள் மதுரையில் 8 விடுதிகளில் தங்கவைக்கப்படுகின்றனா். இந்த விடுதிகளில் நிலையான பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹாக்கி வீரா்கள் பயணிக்கும் சிறப்புப் பேருந்துகளிலும் காவல் துறையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஹாக்கி மைதானத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமாா் 200 பேருந்துகள், 760 காா்கள், 3,000-க்கும் அதிகமான இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றாா் அவா்.

நுழைவுச் சீட்டு: தமிழக ஹாக்கி சம்மேளனத் தலைவா் சேகா் ஜே. மனோகா் தெரிவித்ததாவது:

மதுரையில் நவ. 28 முதல் டிச. 2-ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அதன் பிறகு, தரப் பட்டியல்படி போட்டிகள் நடைபெறும். மொத்தம் 31 போட்டிகள் இங்கு நடைபெறும். போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளை ட்ற்ற்ல்ள்://ற்ண்ஸ்ரீந்ங்ற்ஞ்ங்ய்ண்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பெறலாம். ஒரு தனி நபா், ஒரு நாள் போட்டியைக் காண நுழைவுச் சீட்டு பெற்றிருந்தால், அன்றைய தினம் நடைபெறும் 4 போட்டிகளையும் அவா் பாா்க்கலாம். இங்கு நடைபெறும் போட்டிகளை 160 நாடுகளுக்கு ஒளிப்பரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com